-வடமலை ராஜ்குமார்
இரண்டரை இலட்சம் பெறுமதியான தாலிக்கொடி கண்டெடுத்து ஒப்படைப்பு
கடந்த 07ஆம் திகதி தொலைக்கப்பட்ட இரண்டரை இலட்சம் பெறுமதியான, தாலியுடனான தங்கச் சங்கிலி கடந்த 12ஆம் திகதி, சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்ட மூதூர் பிரதேச சபை சுகாதாரத் தொழிலாளர்களால் கண்டெடுக்கப்பட்டு, உடன் உரியவர்களிடன் ஒப்படைக்கப்பட்டது.
மூதூர், மின்சார நிலைய வீதியில் வசித்துவரும் திருமதி சாள்ஸ் அல்பேர்ட் ஸ்ரெலா புஸ்பராணி வழமையாக தனது தாலியுடனான தங்கச் சங்கிலியை பாதுகாப்பாக பெட்டி ஒன்றில் வைப்பது வழக்கம். அன்றும் அவர் தனது சங்கிலியைக் கழற்றி பெட்டியோரமாக வைத்துள்ளார். பின்னர் கணவர் உண்பதற்காக சந்தையில் வாங்கிவந்த வத்தகைப் பழத் துண்டொன்றை பேப்பரில் சுற்றி அதன் அருகிலேயே வைத்துள்ளார். மறுநாள் பழம் பழுதடைந்த காரணத்தினால் அதனை சுற்றப்பட்ட பேப்பருடன் தூக்கி, கழிவகற்றல் பொதியினுள் போட்டு மூதூர் பிரதேச சபை சுத்திகரிப்பு வாகனத்தை எதிர்பார்த்து காத்திருந்தார். அழுகிய வத்தகப் பழப் பொதியுடன் தனது தாலிக்கொடியும் இருந்ததை ஸ்ரெலா அறிந்திருக்கவில்லை. சுத்திகரிப்பு வண்டி வந்தது. ஸ்ரெலா புஸ்பராணியின் வீட்டுக் கழிவுப் பொதி வண்டியில் ஏற்றப்பட்டது.
அன்றைய தினமே போடுவதற்காக தான் வைத்த தாலிக்கொடியை எடுக்கச்சென்ற ஸ்ரெலா அதிர்ச்சியடைந்தார். அழுது கண்ணீர் வடித்தார். வீடு முழுவதும் தேடினார் எங்கும் கிடைக்கவில்லை. இரண்டு நாட்கள் கழித்து கழிவகற்றல் சேவைக்காக வருகைதந்த தொழிலாளர்களிடம் சங்கிலி காணாமல் போனமை பற்றி ஸ்ரெலா கண்ணீருடன் கூறியுள்ளார். இரண்டு நாட்களாக தொழிலாளர்கள் முழு முயற்சியுடன் குப்பைகளைத் துலாவித் தேடினர். 2012.06.12ஆம் திகதி சாரதியும், தொழிலாளர்களும் தங்கள் பணி முடித்து, சங்கிலியை தேடும் முயற்சியில் இறங்கினர்.
ஸ்ரெலாவின் கவலையும், கண்ணீரும் வீண்போகவில்லை. சுகாதாரத் தொழிலாளி எம்.ஜெயராஜ் மற்றும் சாரதி எம்.ராசிக் என்பவர்களின் தேடுதல் வேட்டையில் சங்கிலி கண்டெடுக்கப்பட்டது. தொழிலாளர்கள் சந்தோசத்துடன் சங்கிலியை சபை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
ஸ்ரெலாவும் அவரது கணவரும் சபைக்கு அழைக்கப்பட்டு சபையின் கௌரவ உறுப்பினர்களான இ.நாகேஸ்வரன், பீ.ரீ.எம்.பைசர் ஆகியோர் முன்னிலையில் செயலாளர் ஜே.நஜாத் அவர்களால், சங்கிலி ஒப்படைக்கப்பட்டது.
மூதூர் பிரதேச சபை சுகாதாரத் தொழிலாளர்கள் கடின உழைப்பாளிகள் மட்டுமல்ல உண்மையானவர்களும் தான் என்பதை நிரூபித்துள்ளார்கள்.