Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூன் 19 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
'புதிய வட்டாரமுறை மறுசீரமைப்பானது, முஸ்லிம்களுக்கு மிகவும் பாதகமானது என்பதுடன், இதற்குத் தீர்வு காணாமல் புதிய எல்லை நிர்ணயத்தின் பிரகாரம் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை திருகோணமலை மாவட்டத்தில் நடத்த முடியாது. அவ்வாறு நடத்தினால், அதற்கு எதிராக நீதிமன்றம் செல்வோம்' என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்றூப் தெரிவித்தார்.
திருகோணமலையில் 'முஸ்லிம்களின் காணிப் பிரச்சினையும் அதற்கான தீர்வும்' எனும் தொனிப்பொருளில் ஆய்வரங்கு, கிண்ணியாப் பொதுநூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது,'புதிய வட்டார எல்லை நிர்ணயத்தால், முஸ்லிம்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சிறுபான்மையினரின் அரசியல் உரிமைகள் திட்டமிடப்பட்டு, நசுக்கப்பட்ட நிலையில் இங்கு எல்லை மீள்நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது' என்றார்.
'பழைய வட்டாரமுறைத் தேர்தலின் பிரகாரம், அப்போது திருகோணமலை மாவட்டத்தில் 21 உள்ளூராட்சி சபைகள் இருந்தன. இவற்றில் கிண்ணியாவில் 3 கிராம சபைகளும் மூதூரில் 5 கிராம சபைகளும் இருந்தன. இன்று மூதூரிலிருந்து ஈச்சிலம்பற்று தனியான சபையாக மாற்றப்பட்டு, இங்குள்ள 7,150 வாக்குகளுக்கு 8 உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டுள்ளார்கள்.
'புதிய வட்டாரமுறையின் கீழ் 24,900 வாக்குகளைக் கொண்ட கிண்ணியா நகரசபைக்கு 8 உறுப்பினர்களும் 5,600 வாக்குகளைக் கொண்ட கோமரங்கடவெல பிரதேசத்துக்கு 10 உறுப்பினர்களும் 3 போனஸ் ஆசனங்களும் வழங்கப்பட்டுள்ளன. 17,150 வாக்குகளைக் கொண்ட குறிஞ்சாக்கேணிப் பிரதேசத்துக்கு 8 உறுப்பினர்களும் 2 போனஸ் ஆசனங்களும் வழங்கப்பட்டுள்ளமையானது, பெரும்பான்மைச் சமூகத்துக்கு ஒரு நீதியும் முஸ்லிம்களுக்கு இன்னுமொரு நீதியா?
இதேபோன்று, முஸ்லிம்களின் வாக்குகளை அதிகமாகக் கொண்ட தம்பலகாமம், குச்சவெளி போன்ற பிரதேசங்களுக்கு புதிய ஆசன ஒதுக்கீட்டு முறையில் பாராபட்சம் காட்டப்பட்டுள்ளது.
எனவே, புதிய உள்ளூராட்சிமன்ற முறையின் கீழ், இந்த மாவட்டத்தில் 42 சதவீதமாக இருக்கின்ற முஸ்லிம்கள், 34 உறுப்பினர்களையும் 32 சதவீதமாக இருக்கின்ற தமிழ் மக்கள் 39 உறுப்பினர்களையும் 24 சதவீதமாக இருக்கின்ற சிங்களவர்கள் 74 உறுப்பினர்களையும் தெரிவுசெய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாரிய வித்தியாசம் முஸ்லிம் பிரதேசங்களுக்கு திட்டமிட்டு செய்யப்டட்ட அநீதியாகும். இதை எதிர்த்தே நாங்கள் நீதிமன்றம் செல்வோம்' என்றார்.
'பெரும்பான்மைப் பிரதேசங்களில் அவர்களின் வாக்காளர்கள் தொகைக்கு வழங்கப்பட்டமை போன்ற ஆசன ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கும் வழங்கப்படும்வரை போராடுவோம். சேருவில, கோமரங்கடவெல, பதவிசிறிபுர போன்ற பிரதேசங்களில் தேர்தலை நடத்த அனுமதிப்போம். ஏனெனில், அப்போதே அந்தப் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்ட ஆசன ஒதுக்கீட்டுக்கு ஏற்ப எங்களுக்கும் தாருங்கள் என்று நீதிமன்றத்தில் வாதிட முடியும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
27 minute ago
50 minute ago