2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

அதிக வெப்பத்தால் ’வெப்ப பக்கவாதம்’ ஏற்படலாம்; அவதானமாக செயற்படவும்!

Editorial   / 2020 பெப்ரவரி 28 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்திசாலித்தனமாகச் செயற்படுவதன் மூலமும் வைத்தியர்களின் ஆலோசனைகளை முறையாகப் பின்பற்றுவதன் மூலமும், நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பத்துடன் கூடிய வானிலையால் ஏற்படக்கூடிய ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பு பெறலாமென்று, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதிக வெப்பத்துடன் கூடிய வானிலை தொடர்பில், சுகாதார அமைச்சின் நல்வாழ்வுத்துறைத் திணைக்களம், விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சுற்றுச்சூழல் வெப்பநிலையானது, சாதாரண நிலைமையை விட, இந்நாள்களில் அதிகளவில் காணப்படுகின்றது. இந்த அதிக வெப்பநிலை காரணமாகவும் அதனால் மனித உடலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும், பொதுமக்கள் அவதானமான இருக்கவேண்டும்.

அதிக ஆபத்துள்ள பிரிவுகள்:

சாதாரணமாக, உடலில் காணப்படும் வெப்பநிலையானது, வியர்ப்பதன் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இருப்பினும், சுற்றுச்சூழல் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் போது, இந்தச் செயற்பாடு முறையாக இடம்பெறாது. இந்நாள்களில், இலங்கையின் சுற்றுச்சூழல் ஈரப்பதம், 95 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதனால் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமானது, சிலருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். சிறுவர்கள், 4 வயதுக்குக் குறைந்த குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், பருமன் அதிகரித்தவர்கள், அதிக எடை கொண்டவர்கள், நோயாளிகள் ஆகியோர், இந்நாள்களில் கனவனமாக இருக்க வேண்டும்.

எவ்வாறு பாதுகாப்புப் பெறுவது?

தற்போது நிலவும் அதிக வெப்பத்திலிருந்து பாதுகாப்பு பெறவேண்டுமாயின், வழ​மையை விட அதிகளவில் நீரைப் பருக வேண்டும். கடுமையான உடற்பயிற்சிகளின் போது பருக வேண்டிய நீலை விட அதிகளவில் பருக வேண்டும். அவ்வாறு உடற்பயிற்சியின் போது, மணித்தியாலத்துக்கு 2 முதல் 4 கிளாஸ் நீர் அருந்துவது சிறந்தது. இது, சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கு கட்டாயம். சாதாரணமாக உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் உப்பின் அளவே, உடலுக்குப் போதுமானது.

அனைத்துத் தரப்பு மக்களும், விசேடமாகச் சிறுவர்கள், தங்களது உடலால் தாங்கக்கூடிய அளவில் மாத்திரமே பணிகளை முன்னெடுக்க வேண்டும். உடற்பயிற்சிகளை, காலை அல்லது மாலை வேளைகளில் மாத்திரம் செய்யவும். இவ்வாறு உடற்பயிற்சிகளில் ஈடுபடுவோர், உடற்பயிற்சியின் இடைக்கிடையே, நிழலுள்ள இடங்களுக்குச் சென்று ஓய்வெடுப்பது அத்தியாவசியம்.

சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும், வீட்டிலோ அல்லது மூடிய இடத்திலோ இருப்பது சிறந்தது. அல்லது, நிழல் உள்ள இடத்தில் இருப்பது உகந்தது. காற்றுப் பதனாக்கி (AC) உள்ள இடங்களில் இருப்பது சிறப்பு. மின்விசிறிகள் இருப்பினும் உகந்தது. குளிர்ந்த நீரில் குளிப்பது, உடல் வெப்பத்தைக் குறைக்கும். இ​ளம் நிறங்களிலான பருத்தி ஆடைகளை அணிவது சிறந்தது. உடலை முழு அளவில் மறைக்கும் ஆடைகளை அணிவது உகந்தது. உடலைச் சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாப்பதற்காக, தொப்பியொன்றை அணிவதையோ அல்லது குடையொன்றை​ப் பயன்படுத்துவதையோ வழக்கமாகக் கொள்ளுங்கள்.

எதைச் செய்யக்கூடாது?

இவ்வாறான வெப்பம் அதிகமாகக் காணப்படும் காலங்களில், பொதுமக்கள் செய்யக்கூடாத விடயங்கள் சில உள்ளன. சூடான உணவுகள், பாணங்கள், விசேடமாக சுடச்சுட தேநீர் அருந்தக் கூடாது. காற்றுப் புகாத அறைகள் அல்லது இடங்களில் இருக்கக் கூடாது. மதுபானம், அதிக குளிர்பாணங்கள், குளிரான சாப்பாடுகள், இனிப்புச் சுவை அதிகமான பானங்களை அருந்தக்கூடாது.

பொதுமக்களுக்கு அவதானம் தேவை

இந்நாள்களில், பொதுமக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டும். ஒருவர் உடலை வருத்தி ஏதாவது செய்துகொண்டிருக்கும் போது, அவருக்கு உடல் சோர்வு, நெஞ்சில் படபடப்பு, மூச்செடுப்பதற்குச் சிரமப்படுதல் போன்ற விளைவுகளை எதிர்நோக்கினால், உடனடியாக அவர் செய்யும் வேலையை நிறுத்திவிட்டு, நிழலான இடத்துக்கோ அல்லது குளிர்மையான இடத்துக்கு அவரை அழைத்துச் செல்லுங்கள். அவரை ஓய்வெடுக்கச் செய்யுங்கள். அதேபோன்று தலைப் பாரம் அல்லது தலைச்சுற்று போன்று ஏற்படுவதாயின், அதை அருகில் இருப்பவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

சூரிய வெப்பத்தால், உடலின் தோல் சிவப்பாக வாய்ப்புள்ளது. இதனால், அரிப்பு ஏற்படக்கூடும். சில வேளைகளில், சூட்டுக் காயங்கள் அல்லது கொப்புளங்களும் ஏற்படலாம்.​ சன் கிரீம் மூலம், இதைக் குறைத்துக்கொள்ளலாம். தோல் அல்லது கழுத்து, நெஞ்சு, மார்புப் பகுதிகளில் அரிப்பு ஏற்படலாம். குளிர்மையான இடங்களில் இருப்பதாலும் உடலைக் குளிர்மையாக வைத்திருப்பதாலும், இவ்வாறான சிக்கல்களிலிருந்து விடுபடாலாம்.

அதிக வெப்பம் காரணமாக, சிறுவர்களுக்கு எரி காயங்கள் ஏற்படக்கூடும். அதனால், வைத்தியரொருவரிம் அவர்களைக் காண்பித்தது சிறந்தது. தசைப் பிடிப்புகள், இக்காலங்களில் அதிகளவில் ஏற்படக்கூடும். இதன்போது, உப்பு, சீனி கலந்த பானங்கள் பருகுவதோடு, ஓய்வாக இருப்பது சிறப்பு. ஒரு மணித்தியாலத்துக்குள் நிலைமை வழமைக்குத் திரும்பாவிடின், வைத்தியரை நாடுவது சிறந்தது.

வெப்ப பக்கவாதம் (heat strokes)

அதிக வெப்பம் காரணமாக, சிலருக்கு வெப்ப பக்கவாதம் (heat strokes) ஏற்படக்கூடும். உடலால் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாமற்போனால், அது, மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கச் செய்யக்கூடும். இதனால், வெப்ப பக்கவாதம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. எவ்வாறாயினும், இலங்கையில் இந்நோய் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது.

விசேட அவதானமிக்க தரப்பைச் சேர்ந்த நபர்கள், தற்போது நிலவும் அதிக வெப்பத்துடன் கூடிய வானிலையால், மிகவும் பாதுகாப்புப் பெறவேண்டும். சிறுவர்கள், 4 வயதுக்குக் குறைந்த குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், இந்த வெப்பநிலை மாற்றத்தை அதிகளவில் உணர்திறன் கொண்டிருக்கிறார்கள். இதனால், தங்களது உடல் வெப்பத்தைச் சீராக வைத்திருக்க, மற்றவர்களைச் சார்ந்திருப்பார்கள்.

இதேவேளை, உடல் பருமன் அதிகமானோரால், தங்களுடைய தோலுக்குக் கீழுள்ள எண்ணெய்ப் படிவத்தால், உடல் வெப்பத்தைக் குறைத்துக்கொள்ள முடியாது. அதனால், இலகுவான ஆடைகளை அணிந்து, குளிர்மையான இடங்களில் இருப்பதும், சிறுவர்களுக்கும் இலகுவான ஆடைகளை அணிவித்து, அவர்களையும் குளிர்மையான இடத்தில் வைப்பதும் சிறந்தது. அத்துடன், சிறுவர்களுக்கு அடிக்கடி நீராகாரங்கள், நீர் என்பவற்றைப் பருக்கச் செய்வதோடு, சூடான உணவுகள், பானங்களை அவர்களுக்குக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X