2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

அறிவைப் பெற்றுக்கொள்ளும் ‘பிரதான மேடை சைபர் வெளி’

Editorial   / 2017 நவம்பர் 24 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

“தற்காலத்தில் தகவல் மற்றும் அறிவைப் பெற்றுக்கொள்ளும் பிரதான மேடையாக சைபர் வெளி மாறியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தல், மானிட அபிவிருத்தி மற்றும் சமூக மறுசீரமைப்புச் செயற்பாட்டின் பிரதான அளவுகோலாக சைபர் வெளி மாறியுள்ளதாக குறிப்பிட்டுள்ள பிரதமர், இதன் காரணமாக மனித சமூகத்துக்கு புதிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டினார் என்றும் குறிப்பிட்டார்.

புதுடெல்லியில் உள்ள புல்மன் ஹொட்டலின் எரோசிட்டியில் இடம்பெற்ற, சைபர் வெளி உலக மாநாட்டில் விசேட விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, பிரதமர் மேற்கண்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் ஆற்றிய உரை தொடர்பில், பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“மானிட சுதந்திரம் மற்றும் உரிமைகள், தனிப்பட்ட சுதந்திரம் போன்ற துறைகளில் இந்த சவால்களை அதிகளவில் சைபர் வெளி ஊடாக முகங்கொடுக்க வேண்டியிருப்பதால் சைபர் ஒழுக்க நெறிமுறைகள் தொடர்பாகக் கவனஞ் செலுத்த வேண்டிய காலம் உருவாகியுள்ளது” என்றார்.

“சுதந்திரமாகத் தகவல்கள் வெளிவருதல் மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் என்பவற்றுக்கிடையே சமநிலையை ஏற்படுத்துவதற்கு சைபர் வெளியில் நல்லாட்சி அமுலாக வேண்டும் என்பது தனது நம்பிக்கையாகும்” என்றும் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

“இணையத்தள நடுநிலைமைத் தன்மையை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் சைபர் வெளியில் முன்னேற்றகரமான, புரட்சிகரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்” என்றார்.

நரேந்திர மோடி உரை

இந்த மாநாட்டை ஆரம்பித்துவைத்து உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,

“ஒருபுறத்தில் அந்தரங்கம் மற்றும் வெளிப்படைத்தன்மையைச் சமநிலைப்படுத்திக் கொண்டும், மறுபுறத்தில் அடிப்படைவாத, தீவிரவாத கருங் குதிரைகளுக்கு டிஜிட்டல் தளத்தைத் திறந்து விடாமலும், டிஜிட்டல் தொழிநுட்பத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும்” என்றார்

“இந்தியா, டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாக ஊழல்களை ஒழிக்கவும் அனாவசிய செலவுகளைக் குறைக்கவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது” என்று மேலும் தெரிவித்தார்.

டிஜிட்டல் தொழிநுட்பத்தை நல்லாட்சிக்குப் பயன்படுத்திக்கொண்டுள்ள முறைமை தொடர்பாகவும், அதன் ஊடாக இந்தியா பெற்றுக்கொண்டுள்ள முன்னேற்றம் தொடர்பாகவும் இந்தியப் பிரதமர் இங்கு விரிவாகக் கருத்துகளை முன்வைத்தார்.

“உலகம் ஒரே குடும்பம்” என்பது இந்தியாவின் பழையதோர் பழமொழி எனக் குறிப்பிட்ட மோடி, அந்தப் பழமொழியை நவீன உலகுடன் இணைத்து கொள்வதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாக சிறந்த வாய்ப்புக் கிடைப்பதாக குறிப்பிட்டார்.

ஜனநாயகத்தைப் பலப்படுத்தவும், மனிதாபிமானத்துடன் கூடிய தொழில்நுட்ப முறைமைகளை மேம்படுத்தவும் சைபர் வெளி ஊடாக கிடைக்கும் சந்தர்ப்பங்கள் தொடர்பாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

இலட்சக்கணக்கான இந்திய மக்களுக்கு சேவைகளை வழங்கும் ஜன் தான் - ஆதார் டிஜிட்டல் செயல்முறை தொடர்பாகவும் இந்தியப் பிரதமர் விடயங்களைத் தெளிவுபடுத்தினார்.

இதில் நிதி மற்றும் வங்கிச் சேவைகள், உதவி வசதிகள் என்பவற்றைக் கையடக்கத் தொலைபேசி ஊடாகப் பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்துவதே இடம்பெறுகிறது. இது கிராமப்புற மக்களிடையே மிகவும் பிரபல்யம் பெற்றுள்ளதுடன், இடைநிலை ஊழல்கள் பலவற்றை இதன் ஊடாக் தடுக்க முடிந்துள்ளதாகவும்” அவர் தெரிவித்தார்.

135 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் இம்முறை மாநாட்டில் கலந்துகொண்டதுடன், உலகம் முழுவதும் 2,800 இடங்களிலிருந்து அதிகளவானோர் இந்த மாநாட்டுடன் நேரடியாகத் தொடர்புகளை ஏற்படுத்துகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .