2025 மே 17, சனிக்கிழமை

இந்தியத் தேர்தல் நிலைவரம்: பா.ஜ.க, தி.மு.க முன்னணியில்

Editorial   / 2019 மே 23 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா முழுவதும், இன்று (23) ஓட்டுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், மக்களவைத் தேர்தலில், பாரதிய ஜனதாக் கட்சிய தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது.

இந்தச் சூழலில், மோடியே மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு உருவாகியுள்ளது. கருத்துக்கணிப்பு பொய்யானது, நாங்களே ஜெயிப்போம் என மார்தட்டிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெரும் பின்னடவைச் சந்தித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல், கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி ஆரம்பித்து, இம்மாதம் 19ஆம் திகதி வரை, ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது. மக்களவைத் தேர்தலில் பதிவான ஓட்டுகளில், பா.ஜ. கூட்டணி 325க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 90 க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 105 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், மகாராஷ்ட்டிரா, பீகார், புதுடில்லி உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில், பாரதிய ஜனதாக் கூட்டணியே பெருவாரியான தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. காங்கிரசைப் பொறுத்தவரை,  பஞ்சாப், கேரளா, தமிழகத்தில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

இதேவேளை, தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. தி.மு.க கூட்டணி 37 இடங்களிலும் அ.தி.மு.க கூட்டணி தர்மபுரியிலும் தேனியிலும் மட்டும் முன்னிலையில் உள்ளது. புதுச்சேரியில், தி.மு.க கூட்டணி முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் பெரும் தோல்வியே கிட்டியுள்ளது.

22 தொகுதிகளில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில், அ.தி.மு.கவும் தி.மு.க.வும் சரி சமமாக வெற்றியை பெற்று வருகிறது. இதனால், தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சிக்கு பெரும் ஆபத்து இல்லை என்றே தெரிகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .