2025 மே 13, செவ்வாய்க்கிழமை

இலங்கை பெண்ணுக்கு கொரோனா தொற்றியது எவ்வாறு! அவரே வெளியிட்ட தகவல்

Editorial   / 2020 மார்ச் 03 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

தான் பணிபுரிந்த வீட்டில் உள்ள பெண்ணுக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாகவே தனக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக, இலங்கை பெண் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான முதலாவது இலங்கை பெண், இத்தாலியில் வைத்து அடையாளம் காணப்பட்டிருந்தார்.

இத்தாலியின் ப்ரேஸியா பகுதியில் வசித்து வரும் 46 வயதான பெண் ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இலங்கை அதிகாரி ஒருவருடன் அவர் இன்று (03) காணொளி ஊடாக உரையாடிய போது, அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட இந்த பெண் கடந்த 10 வருடங்களாக தனது கணவருடன் இத்தாலியில் வசித்து வருகின்றார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இலங்கை பெண் தொற்று குறித்து பேசும் காணொளி தற்சமயம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

சகோதர மொழியில் அந்த பெண், இலங்கை அதிகாரியுடன் உரையாடியிருந்தார்.

“எனக்கு தலைவலியும் காய்ச்சலும் காணப்பட்டது. சாதாரண தலைவலி காய்ச்சல் என நினைத்துக்கொண்டிருந்தேன். வேதனை அதிகரித்த பட்சத்திலே நான் வைத்தியசாலை சென்று சிகிச்சைப் பெற முயற்சித்தேன். 

அந்த சந்தர்ப்பத்தில்தான் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்ததை வைத்தியர்கள் அறிவித்தனர். . 

நான் பணிபுரியும் வீட்டில் ஒரு பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக அறிவித்தார்கள். அவர்களிடமிருந்து எனக்கும் தொற்றியதாக தனக்கு அறியக் கிடைத்தது. 

என்னை பார்வையிடுவதற்கு எவரையும் வைத்தியசாலை நிர்வாகம் அனுமதியளிக்கவில்லை. எனது கணவரை கூட பார்வையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதன்போது, பெண்ணுடன் பேசிய இலங்கை அதிகாரி, இலங்கையின் ஜனாதிபதி, சுகாதார அமைச்சர் ஏனைய தரப்பினர் குறித்த பெண் தொடர்பில் அக்கறையுடன் செயற்படுவதாக கூறியுள்ளார்.

அத்துடன், இலங்கை மக்கள் அனைவரும் அந்த பெண் நலம்பெற வேண்டும் என்ற அக்கறையுடன் உள்ளதாகவும் அச்சமடைய வேண்டாம் என்றும், அந்த அதிகாரி, பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இத்தாலியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2036 ஆக காணப்படுகின்றது.  52 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X