2025 ஜூலை 21, திங்கட்கிழமை

‘இலங்கையை சூறையாடாதீர்’

Editorial   / 2018 மார்ச் 12 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கண்டியில் இடம்பெற்ற வன்செயல்களுக்கு, சாரதி ஒருவர் மீதான தாக்குதலே வழிசமைத்துள்ளதெனத் தெரவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தத் தாக்குதலை மேற்கொண்ட இளைஞர் குழாமைக் கைது செய்து, அவர்களுக்குரிய தண்டனையைப் பெற்றுக்கொடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.  

இந்தப் பிரச்சினைதொடர்பில், பேச்சுவார்த்தைகள் மூலம், ஓர் இணக்கப்பாட்டுக்கு வரும் வரை, குழப்பம், வன்முறை ஊடாக, இலங்கையின் எதிர்காலத்தை அ​ழிக்க வேண்டாமென, அனைத்துத் தரப்பினரிடமும் கேட்டுக்கொள்வதாக, பிரதமர் மேலும் கூறினார்.  

கொழும்பு, வெல்லம்பிட்டிய பிரதேசத்தில், நேற்று (11) இடம்பெற்ற மத நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், ​யுத்தத்தால், இந்நாட்டு இளைஞர் யுவதிகளின் எதிர்காலம் இல்லாமல் செய்யப்பட்டதாகவும் யுத்தத்துக்குப் பின்னரும், அவ்வாறு அவர்களது வாழ்வை அழிக்க, ஒருபோதும் இடமளிக்க ​முடியாதென்றும் குறிப்பிட்டார்.  

பெரும்பான்மையின சாரதி ஒருவர் மீது, முஸ்லிம் இளைஞர்கள் சிலர் நடத்திய தாக்குதலே, கண்டி மாவட்டத்தில் வன்செயல்கள் ஏற்படக் காரணமாகின என்று குறிப்பிட்ட பிரதமர், இதற்கு காரணமாகவர்களுக்கு தண்டனை வழங்க, விரைந்துச் செயற்படுமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் இந்தச் சம்பவத்தை, கண்டிக்குள் மாத்திரம் கட்டுப்படுத்திக்கொள்ளக் கிடைத்தமை, அதிர்ஷ்டவசமாகுமென்றும் குறிப்பிட்டார். 

கண்டியில் ஏற்பட்ட நிலைமை, நாடு முழுவதும் பரவுமென்று, பலர் அச்சம் தெரித்தனர். அந்த அச்சம், தமது மனங்களிலும் ஏற்பட்டிருந்ததாகக் குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க, ஆனால், தாம் அச்சமடந்தவாறான சம்பவங்கள் இடம்பெறவில்லையென்றும் அதனைத் தடுத்து நிறுத்த தம்மால் முடிந்ததாகவும், இதற்காக, பாதுகாப்புத் தரப்பினருக்கு நன்றி கூறிக்கொள்வதாகவும் கூறினார்.  

யுத்தம் காரணமாக, சுமார் 30 வருடங்களாக நாம், போரிட்டுக் கொண்டோம். அதனால், இனங்களுக்கிடையே காணப்பட்ட ஒற்றுமை இல்லாமல் போனதெனக் குறிப்பிட்ட அவர், இல்லாமல் போன ஒற்றுமையை, மீண்டும் ஏற்படுத்திக் கொள்வதற்காக, அந்தந்தத் தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இவை அனைத்துக்கும் முதலாக, நாம் அனைவரும் இலங்கையினம் என்ற உண்மையை, அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்தினார். 

நாட்டின் பெரும்பான்மை இனத்தினரான சிங்களவர்களுக்கும் சிறுபான்மையினமாக உ ள்ள முஸ்லிம்களுக்கும் இடையில், நாட்டுக்குள் சிற்சில பிரச்சினைகள் எழுந்து வருகின்றவென்றுச் சுட்டிக்காட்டிய பிரதமர், இவை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவை இரகசியமல்ல​வென்றும் கூறினார்.  

இந்தப் பிரச்சினைகள் தொடர்பில், பேச்சுவார்த்தைகள் மூலம், ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டுமென்று, இரு தரப்பினரும் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், பேச்சுவார்த்தைகள் மூலம், இணக்கத்தை ஏற்படுத்தும் வரை, குழப்பம், வன்முறை ஊடாக, இலங்கையின் எதிர்காலத்தை அ​ழிக்க வேண்டாமென, அனைத்துத் தரப்பினரிடமும் கேட்டுக்கொள்வதாக, பிரதமர் மேலும் கூறினார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .