2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

’உண்மையை மறைப்பதால் எதிர்காலப் பயணம் தடைப்படுகிறது’

Editorial   / 2018 ஏப்ரல் 18 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

குறிப்பிட்ட சில ஊடகங்கள், அரசியல் இலாபம் கருதி, உண்மையை மூடி மறைத்து, பொய்யை முன்வைத்து வருவது, தாய் நாட்டின் எதிர்காலப் பயணத்துக்குத் தடையாள அமைந்துள்ளதென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலண்டனில் வசிக்கும் இலங்கையர்களை, நேற்று (17) சந்தித்துக் கலந்ததுரையாடும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய ஜனாதிபதி, தாய் நாட்டின் உண்மை நிலைமையைக் கருத்திற்கொண்டு, நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் பங்கேற்குமாறும், லண்டன் வாழ் இலங்கையர்களிடம் கோரினார்.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி லண்டனில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் இடம்பெற்றது. இதன்போதே ஜனாதிபதி இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

கல்விமான்கள், வர்த்தகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பலர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதுடன், ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு அளித்தனர்.

இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி "நாட்டில் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் ஸ்தாபித்து, நாட்டை அபிவிருத்தியை நோக்கி முன்னெடுத்துச் செல்லும் அரசாங்கத்தின் செயற்றிட்டங்கள் பற்றிய சரியான தகவல்கள் நாட்டு மக்களை சென்றடைவதில்லை என தெரிவித்தார்.

சில ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் குறுகிய அரசியல் மற்றும் வர்த்தக நோக்கங்களுடன் உண்மையை மறைத்து பொய்யான விடயங்களை மேலோங்கச் செய்வதற்கு முயற்சிப்பதே இதற்கான முக்கிய காரணமாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டில் சகல துறை சார்ந்தவர்களும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தாம் பெற்றுக்கொண்டுள்ள சுதந்திரம் பற்றிய சரியான புரிந்துணர்வுடன் செயற்படவில்லை எனவும் தெரிவித்தார்.

கடந்த மூன்று வருடங்களுக்குள் நாட்டின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளக்கூடிய சகல பொறுப்புக்களையும் உயரிய மட்டத்தில் நிறைவேற்றுவதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளதென வலியுறுத்திய ஜனாதிபதி, நாட்டில் சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தி, நாட்டில் நிலவும் அமைதியான சூழலை நிரந்தரமாகப் பேணுவதற்கு முன்னுரிமையளித்து தமது அரசாங்கம் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

நாட்டை அபிவிருத்தியை நோக்கி கொண்டுசெல்வதோடு மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட பொருளாதார திட்டங்களினால் தற்போது சிறந்த பெறுபேறுகள் கிடைத்துள்ளதுடன், நாட்டுக்கெதிராக காணப்பட்ட சர்வதேசத்தை மீண்டும் நாட்டை நோக்கி கொண்டுவர முடிந்துள்ளமையானது கடந்த மூன்று வருடங்களுக்குள் பெற்றுக்கொண்டுள்ள முக்கிய வெற்றியாகும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X