2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கன்னியமர்வு முந்துமா?

Editorial   / 2018 ஜனவரி 08 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தாண்டுக்கான முதலாவது சபையமர்வு எதிர்வரும் 23ஆம் திகதியன்று ஆரம்பமாகுமென, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவ்வமர்வு, அதற்கு முன்னரே நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் தென்படுவதாக, நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.  

எனினும், சபையமர்வை முன்கூட்டிய நடத்துவது தொடர்பிலான இறுதி முடிவு, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், நாளை செவ்வாய்க்கிழமை கூடும், கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் போதே தீர்மானிக்கப்படவிருக்கின்றது.  

மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் விசாரணைச் செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, அவ்வறிக்கை மீது விவாதம் நடத்தப்படவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.   

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கடந்த வியாழக்கிழமை கோரிக்கை விடுத்திருந்தனர்.  

இந்நிலையில், இந்தக் கூட்டத்தை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடத்துவதற்கு, சபாநாயகர் கருஜயசூரிய தீர்மானித்துள்ளார் என்றும் அதற்கான உத்தியோகபூர்வ அழைப்புகள், கட்சித் தலைவர்களுக்கு ஏற்கெனவே விடுக்கப்பட்டுள்ளன என்றும் சபாநாயகர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இந்த விவகாரம் தொடர்பிலான விவாதம், முழுநாள் விவாதமாகவா அல்லது இரண்டு, மூன்று நாட்கள் தொடர் விவாதமாகவா நடைபெறபோகிறது என்பது தொடர்பில் கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே தீர்மானிக்கப்படவுள்ளது.  

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு, கட்சித் தலைவர்கள் தீர்மானித்தாலும் அதற்கான அனுமதியை, பிரதமரிடம் பெற்றுக்கொள்ளவேண்டும்.   

இந்நிலையில், கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் நேற்று (07) இடம்பெற்ற, ஐக்கிய தேசியக் கட்சியின் 71ஆவது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தை அவசரமாகக் கூட்டுமாறு, சபாநாயகரிடம் பகிரங்கமாகவே கேட்டுக்கொண்டார்.  

அவ்வாறான நிலையில், புத்தாண்டு கன்னியமர்வுக்கென தீர்மானிக்கப்பட்ட தினத்துக்கு முன்னதாகவே, நாடாளுமன்றம் கூடுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக, அரசியல் தகவல் தெரிவிக்கின்றது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .