2025 மே 17, சனிக்கிழமை

‘கீழ்மட்ட அரசியல் செய்ய வேண்டாம்’

Editorial   / 2019 மே 23 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சி. அமிர்தப்பிரியா

 

அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றாக செயற்பட வேண்டிய இந்த நேரத்தில், நம்பிக்கையில்லாப்  பிரேரணைகளை கொண்டுவந்து எவரும் கீழ்மட்ட அரசியலை மேற்கொள்ளக்கூடாது என்று துறைமுகங்கள் கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க கேட்டுக்கொண்டார்.

 

இவ்வாறான பிளவுகள் இறுதியில் மக்களையே பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.   

கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் விசேட வேண்டுகோளுக்கிணங்க இலங்கை துறைமுக அதிகாரச் சபைக்குச் சொந்தமான காணியில் ஆறு பேர்ச் காணி, பேராயரிடம் நேற்று (22) கையளித்தார்.   

கொட்டாஞ்சேனை கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி கர்தினால் பெர்ணான்டோ பிலோமி ஆண்டகை உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.   

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “கொச்சிக்கடை தேவாலயத்துக்கும் கொழும்பு துறைமுகத்துக்குமிடையே நீண்ட உறவு காணப்படுகிறது.   

இந்த நிலையில், இலங்கையில் இடம்பெற்ற தாக்குதலையடுத்து நீண்ட கால குத்தகை அடிப்படையில் கொழும்புத் துறைமுகத்துக்கு சொந்தமான காணிகளை வழங்குமாறு பேராயர் கோரியிருந்தார். அதற்கிணங்க, நாம் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கான காணியை வழங்கியுள்ளோம்.   

நாட்டில் இடம்பெற்ற சம்பவத்துக்கான பொறுப்பு அனைத்து அரசியல்வாதிகளுக்கும் உள்ளது. நாடு என்ற ரீதியில் முன்னோக்கி பயணிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.   

எனவே, இதனை எவரும் அரசியலாகப் பார்க்கக்கூடாது. நம்பிக்கையில்லா பிரேரணைகளை கொண்டுவரும் கீழ் மட்ட அரசியலை நாம் மேற்கொள்ளக்கூடாது எனத் தெரிவித்த அவர், இதற்கான தீர்வைக் காண்பதற்கான பல வழிமுறைகள் இருக்கின்றன. அந்தவகையில், விசாரணைகளும் சிறப்பான வகையிலேயே முன்னெடுக்கப்படுகின்றன.   

மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இதன் ஊடாகவே நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் ஸ்திரப்படுத்த முடியுமாக இருக்கும் என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .