2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

சட்ட ஆட்சி, சமத்துவம், நீதி, சமஅந்தஸ்த்தை ‘அரசமைப்பில் உள்வாங்கவும்’

Kogilavani   / 2017 ஜூலை 05 , மு.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடல் ரீதியான தீங்குகளை ஏற்படுத்தும் வன்முறைகளின் காரணமாக, கடந்த காலங்களில் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்ட தமிழ் மக்கள் பெரும்பாலானோர் மீண்டும் நாடு திரும்ப விருப்பம் கொண்டிருக்கும் நிலையில், ஜனநாயகம், மனித உரிமைகள், சட்ட ஆட்சி, சமத்துவம், நீதி, பாரபட்சமின்மை, சமஅந்தஸ்த்து உள்ளிட்ட விடயங்கள், அரசியலமைப்பு ரீதியாக உள்வாங்கப்படும் போதே, அது சாத்தியமாகும்” என்று, எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.  

நாடாளுமன்றத்தில், நேற்று(04) நடைபெற்ற தேருநர்களைப் பதிவுசெய்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் வாக்குரிமையை மீள ஸ்தாபிப்பதற்கான ஏற்பாடுகள் இந்த சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் வடக்கு, கிழக்கு மக்கள் பற்றி விசேடமாக குறிப்பிடப்பட்டுள்ளது.  தமிழ் மக்களே வடக்கு, கிழக்கில் இருந்து அதிக எண்ணிக்கையில் இடம்பெயர்ந்துள்ளனர்.   

“தமிழ் ஆயுத போராட்டங்கள் 1970 களின் இறுதிப் பகுதியிலேயே ஆரம்பித்திருந்தன. எனினும், தமிழ் மக்களின் இடம்பெயர்வுகள் அதற்கு இரு தசாப்தங்களுக்கு முன்னரே ஆரம்பித்துவிட்டன. 1956, 1958, 1961, 1977, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. அதில் 83 இல் இடம்பெற்றது பெரும் அழிவை ஏற்படுத்தியிருந்தது.   

“அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு வரை தமிழ் மக்களின் தொடர்ச்சியாக இடம்பெயர்வுகளை சந்தித்திருந்தனர். தமிழ் மக்கள் உள்நாட்டுக்குள் இடம்பெயர்ந்தது மட்டுமல்லாது, பெரும் எண்ணிக்கையானோர் வெளிநாடுகளுக்கும் இடம்பெயர்ந்திருந்தனர். தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட உடல் ரீதியான தாக்குதல்களே இதற்கு காரணம்.   
“இருப்பினும், வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்த பலரும் எந்த நாட்டிலும் பிரஜாவுரிமை மற்றும் வாக்குரிமை இல்லாத நிலையில் இருக்கின்றனர். அவர்கள் மீண்டும் நாட்டுக்கு திரும்பும் விருப்பத்துடன் இருக்கின்றனர்.

அவர்கள் திரும்பி வருவதற்கு அமைதியானதும் வன்முறையற்றதுமான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X