2025 மே 17, சனிக்கிழமை

’சிங்கப்பூரிடமிருந்து ஒத்துழைப்பு இல்லை’

Editorial   / 2019 மார்ச் 19 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய முக்கிய நபரை, இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைப்பது தொடர்பான தனது கொள்கை பற்றிய தெளிவான கூற்றை, சிங்கப்பூர் அரசாங்கம் வெளியிட வேண்டியுள்ளதென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இலஞ்ச, ஊழலை ஒழிக்கும் ஐந்தாண்டுச் செயற்றிட்டத்தை வெளியிடும் நிகழ்வு, கொழும்பில் நேற்று (18) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, மேற்கண்டவாறு கூறியதோடு, தான் இதுபற்றி, சிங்கப்பூர் பிரதமருடன் கலந்துரையாடியதாகவும் தெரிவித்தார்.

வரலாற்றில் இடம்பெற்ற பாரிய கொள்ளையான மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாகக் கண்டறிவதற்கு, தான் நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழுவானது, இதுவரை காலமும் ஆணைக்குழுக்கள் பற்றி மக்கள் மத்தியில் இருந்துவந்த நம்பிக்கையீனம் மற்றும் பின்னடைவான கருத்துக்களை மாற்றியமைத்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த விசாரணையை மேற்கொண்டுவரும் அதிகாரிகள், பல்வேறு சவால்கள் மற்றும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்ததாகக் கூறிய ஜனாதிபதி, சிலவேளைகளில் அவர்களுக்கெதிராக விசாரணைகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் அதனை அரச நிர்வாகத்தில் இடம்பெற்ற பலவீனமான நிகழ்வாகவே தான் கருதுவதாகவும் கூறினார்.

இலஞ்ச, ஊழலை ஒழிப்பதற்கு, தெளிவான நிகழ்ச்சித் திட்டமொன்று நாட்டில் நடைமுறைப் படுத்தப்பட்ட போதும், குற்றவாளிகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பிரச்சினை உள்ளதாகவும் கூறிய அவர், சிறந்த அரச சேவையின் மூலம் இலஞ்ச, ஊழல் இல்லாத சிறந்ததோர் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு, ஊழல், மோசடிகளுக்கு எதிராக தண்டனை வழங்குதல் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .