2025 மே 15, வியாழக்கிழமை

’தாக்குதல்கள் பற்றி அறிவிக்காதிருந்திருந்தால் நான் வெளியிட்ட கடிதம் எவ்வாறு வந்திருக்கும்?’

Editorial   / 2019 ஜூன் 07 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கணேசன் கமலநாதன்

“தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பினால் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், அனைத்துக்கும் பொலிஸ் மா அதிபர்தான் காரணம் என்று கூறப்பட்டது. இன்றுவரை அவ்வாறுதான் கூறப்படுகிறது. ஆனாலும், நான் இன்றுவரையில் அதுபற்றிக் கருத்து வெளியிடவில்லை. அது பற்றிய தகவல்களை நான் அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. நான் அறிவிக்காமல் இருந்திருந்தால், என்னால் வெளியிடப்பட்ட கடிதம் எவ்வாறு வெளியில் வந்திருக்கும்? அதேபோல், இந்த விடயம் குறித்து ஆராயுமாறு, அதிகாரிகளை நான் தெளிவுபடுத்தியிருந்தேன். இந்த விடயத்தின் முக்கியத்தன்மையை அறிந்துகொண்டுதான் நான் சகலருக்கும் அறிவுறுத்தினேன்” என்று, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறி​யமை தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வு, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில், நேற்று (06) இடம்பெற்றது. இதில் முன்னிலையாகி சாட்சியமளித்த போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும் வருமாறு,

கே: உங்களுடைய பொலிஸ் சேவை பற்றிக் கூறுங்கள்?

ஆரம்பத்தில் பயிற்சிபெரும் அதிகாரியாகவே இணைந்துகொண்டேன். அதனையடுத்து, 1996ஆம் ஆண்டில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராகப் பதவி உயர்வு பெற்று, 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் திகதி, பொலிஸ் மா அதிபராகப் பதவியேற்றேன்.

கே: பொலிஸ்து றையின் கட்டமைப்பு பற்றிக் கூறுங்கள்?

151 வருடங்களாகக் காணப்படும் முக்கியமான அரச நிறுவனக் கட்டமைப்பான பொலிஸ் திணைக்களம், காலத்தின் தேவைக்கேற்ற பல மாற்றகளை ஏற்றுக்கொள்ளும்.

கே: பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பிரதான, உங்களுக்குத் தகவல் கூறுவாரா?

இல்லை. பாதுகாப்பு அமைச்சுக்குத்தான் அவர்கள் தகவல்களை அறிவிக்க வேண்டும்.

கே: அவர், பாதுகாப்பு அமைச்சுக்குத்தான் தகவல் அறிவிக்க வேண்டுமா?

அதுதான் சரியான நடைமுறை. அவ்வாறுதான் உள்ளதென உறுதியாகக் கூறமுடியாது.
கே: பயங்கரவாத விசாரணைப் பிரிவின் நாளாந்த அறிக்கை உங்களுக்குக் கிடைக்குமா?
சகல அறிக்கைகளும் கிடைக்காது. பாதுகாப்பு அமைச்சுக்கு வரும் கடிதங்களில் சில கடிதங்கள் கிடைக்கும்.

கே: பாதுகாப்புச் சபைக்கு தொடர்ந்து செல்வீர்களா?

தொடர்ச்சியாக சென்றுக்கொண்டிருந்தேன். 2018.10.23ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்துக்குப் பின்னர் செல்லவில்லை.

கே: இது குறித்த அறிவிப்பு கிடைத்ததா?

நான் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரத்னவுடன் உரையாடிக்கொண்டிருந்த போது, இன்று பாதுகாப்புச் சபை கூட்டம் உள்ளது அல்லவா, தற்போது வரையில் எனக்கு அறிவிப்பு வரவில்லை என்று கூறினேன். அப்போது, பொலிஸ் மா அதிபரை அழைக்க வேண்டாமென ஜனாதிபதி கூறியதாகத் தெரிவித்தார்.

கே: பாதுகாப்புச் சபையில் பொலிஸ் மா அதிபர் நிரந்தர உறுப்பினர் என்பதால், உங்களை அழைக்காததன் காரணம் என்னவென நீங்கள் கேட்கவில்லையா?

பாதுகாப்புச் செயலாளரின் கட்டளையைக் கேள்விக்கு உட்படுத்தும் அதிகாரம் எனக்கில்லை.

கே: பாதுகாப்புச் செயலாளருக்கு உங்கள் அளவுக்கு பாதுகாப்பு குறித்து அனுபவம் இருக்கிறதா?

அது நீங்கள் என்னிடம் கேட்க வேண்டிய கேள்வியல்ல.

கே: அதன் பின்னர் கூடிய பாதுகாப்புச் சபைக்கு உங்கள் சார்பில் எவரும் அழைக்கப்படவில்லையா?

இல்லை. அவ்வாறு எவரும் அழைக்கப்பட்டதாகவும் அறியவில்லை.

கே: உங்களை நியமிக்க மாத்திரமே ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. நீக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உள்ளது. அதுபற்றியும் நீங்கள் கேட்கவில்லையா?

நீங்கள் கூறுவது சரிதான். சில விடயங்கள் நடைமுறையில் சாத்தியப்படாது. ஒழுக்கமான அதிகாரி என்ற வகையில் கட்டளைகளின் பிரகாரம் செயற்படுவதே சிறந்ததாகும்.

கே: பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரி நிஷாந்த சில்வாவின் இடமாற்றத்தை ஏன் இரத்துச் செய்தீர்கள்?

பொலிஸ் ஆணைக்குழுவின் கட்டளைக்கிணங்கவே அதைச் செய்தேன்.

கே: 11 இளைஞர்கள் கடத்தல் பற்றி விசாரணை செய்ததால்தான், அவர் இடமாற்றம் செய்யப்பட்டாரா?

சரியாகத் தெரியவில்லை. அதற்காகவும் இருக்கலாம்.

கே: அவரை இடமாற்றம் செய்யுமாறு எங்கிருந்து அழுத்தம் வந்தது?

ஜனாதிபதியிடம் இருந்து தகவல் வந்தாக, பாதுகாப்புச் செயலாளர் எனக்குக் கூறினார். நிஷாந்த சில்வா நேர்மையான அதிகாரி என நான் அறிவேன்.

கே: அதை அறிந்தும், ஏன் அரசியல் அழுத்தங்களுக்கு உள்ளானீர்கள்?

காரணம் எதுவும் என்னிடம் கூறப்படவில்லை. 11 இளைஞர்கள் விவகாரத்தில், பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் தொடர்புபட்டுள்ளார் என்ற விடயங்கள் பேசப்பட்டன.

கே: தேசிய தௌஹீத் ஜமாஅத் தாக்குதல் பற்றி கூறுங்கள்?

அந்த அமைப்பினால் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், அனைத்துக்கும் பொலிஸ் மா அதிபர்தான் காரணம் என்று கூறப்பட்டது. இன்றுவரை அவ்வாறுதான் கூறப்படுகிறது. ஆனாலும், நான் இன்றுவரையில் அதுபற்றிக் கருத்து வெளியிடவில்லை. அது பற்றிய தகவல்களை, நான் அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. நான் அறிவிக்காமல் இருந்திருந்தால், என்னால் வெளியிடப்பட்ட கடிதம் எவ்வாறு வெளியில் வந்திருக்கும்? அதேபோல், இந்த விடயம் குறித்து ஆராயுமாறு, அதிகாரிகளை நான் தெளிவுபடுத்தியிருந்தேன். இந்த விடயத்தின் முக்கியத்தன்மையை அறிந்துகொண்டுதான் நான் சகலருக்கும் அறிவுறுத்தினேன்.

கே: தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் திசர மெண்டிஸினால் உங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், இந்த விடயம் பற்றிக் கூறப்பட்டதா?

தற்கொலைத் தாக்குதல்கள், கிறிஸ்தவ தேவாலயங்களையும் இந்திய உயர்ஸ்தானிகரகத்தையும் இலக்கு வைத்து நடத்தப்படலாம் என்று எனக்கு அறிவிக்கப்பட்டது.

கே: சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது உங்களது கடமையல்லவா?

எனது கடமைதான். இது மிகப் பாரதூரமான விடயம் என்பதாலேயே, முக்கிய தரப்புகளுக்கு மாத்திரம் அறிவித்தேன். அதன்படி, மேல் மாகணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவுக்கும் கூட்டு வன்முறைத் தடுப்பு மற்றும் விஷேட அதிரடிப்படையின் பிரதானியான எம்.ஆர்.லத்தீப், முக்கிய பிரமுகர்களைப் பாதுகாக்கும் பிரிவின் பிரதானி, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குப் பொறுப்பான பொலிஸ் பிரதானிகளுக்கும் அறிவித்தேன்.

கே: கடிதத்தில் உள்ள காரணங்கள் பாதுகாப்புச் சபையில் பேசப்பட்டனவா?

ஆம் பேசப்பட்டன. 2018.04.09இல் வந்த கடிதம் பற்றித்தான் பேசப்பட்டது. அந்த விடயம், தேசியப் புலனாய்வு மீளாய்வுக் குழுக் கூட்டத்ததிலேயே பேசப்பட்டது.

கே: இந்தத் தகவல் என்று கிடைத்தது?

4ஆம் திகதி கிடைத்ததாக ஊடகங்கள் கூறின. ஆனால், சரியான நாள் தெரியவில்லை.

கே: அதுபற்றி பாதுகாப்புப் பிரிவுக்கு அறிவுறுத்தினீர்களா?

சகல சந்தர்ப்பங்களிலும், முக்கிஸ்தர்களுக்கு பாதுகாப்புக் காரணங்கள் பற்றி அறிவிக்கப்படுவதில்லை. பொலிஸ் மா அதிபர், ஜனாதிபதிக்கு நேரடியாகக் கூறும் நடைமுறையும் பின்பற்றப்படுவதில்லை. அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர்தான் இவ்வாறான விடயங்களை ஜனாதிபதிக்கு அறிவிப்பார். எவ்வாறாயினும், இந்த விடயம் குறித்து பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, ஜனாதிபதிக்கு அறிவுறுத்தியபோதும், அவர் அது தனக்கு அவசியமில்லை என்று கூறியதாக என்னிடம் தெரிவித்தார்.

கே: 18.042019 கடிதம் பற்றிக் கூறுங்கள்?

தற்கொலைத் தாக்குதல் நடத்த இருப்பதாகவும் காத்தான்குடியில் ஏப்ரல் 16ஆம் திகதி மோட்டார் சைக்கிளொன்று வெடிக்கச் செய்யப்பட்டிருந்ததாகவும், கூறப்பட்டிருந்தது. ஆனால், தற்கொலை தாக்குதல் பற்றிய வலுவான தகவல்கள், உறுதியாகக் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

கே: மோட்டார் சைக்கிள் வெடிக்கச் செய்யப்பட்டது தற்கொலை தாக்கதலுக்கான ஒத்திகையாக அமைந்திருக்கலாம் என்று கருதவில்லையா?

அது குற்றப்புலனாய்வு சார்ந்த விசாரணை. அதனை அவர்களே முன்னெடுக்க வேண்டும். அதேபோல், 20ஆம் திகதி கிடைத்த கடித்திலும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன என்றே குறிப்பிடப்பட்டிருந்து.

கே: கடிதம் கிடைத்து. ஒரு வருட இடைவெளி இருந்ததுதானே. என்ன நடவடிக்கைகளை முன்னெடுத்தீர்கள்?

இந்த விசாரணைகளை இரகசியமான முறையில் முன்னெடுக்குமாறு, நாலக்க சில்வாவை அறிவுறுத்தினேன். அதனால், வெளிப்படையான விசாரணைகள் நிறுத்தப்பட்டன.

கே: நீர்கொழும்பு – கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் தாக்குதல் நடத்தியவர் பற்றி அறிந்திருந்தீர்களா?

ஆம். அவர் சஹ்ரானின் உதவியாளர் என அறிய முடிந்தது.

கே: கடிதங்கள் வாயிலாகத் தகவல் பறிமாறியதைத் தவிர, வேறு நடவடிக்கைகளை எடுக்கவில்லையா?

தீர்வுகள் பற்றிப் பேசப்பட்டன. அதை நடைமுறைப்படுத்த முன்பு, அனைத்து விடயங்களும் நடந்து முடிந்துவிட்டன. குழு ரீதியான செயற்பாடுகளும் ஒருங்கிணைப்புச் செயற்பாடுகளும் ஒழுங்காக இடம்பெறாமையே தவறுக்குக் காரணமாகும்.

கே: குழு முறைச் செயற்பாடுகள் வலுவாக இல்லாமையே, தாக்குதல் தடுக்கப்படாமைக்குக் காரணம் என்று கூறுகிறீர்களா?

ஏப்ரல் 20ஆம் திகதி மாலை 7 மணியளவில், மறுதினம் (21) பாரதூரமான சம்பவமொன்று நடக்கலாம் என எனக்கு அழைப்பேசி மூலம் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரிடமிருந்து கிடைத்தது. அந்தத் தகவலை நான் சகல மாகாணங்களுக்கும் அறிவித்தேன். அவ்வாறாறிருக்க, தாக்குதல் நடத்த 2 நாள்களுக்குப் பின்பு தான் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டது.

கே: நீங்கள் அறிவித்த பின்பு, தகவல் பெற்ற அதிகாரிகள் என்ன செய்தனர்?

பொலிஸார் மாத்திரம் தனித்துத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முடியாது. இராணுவத்தின் உதவி வேண்டும். இராணுவத்தை அழைக்கும் அதிகாரம் எனக்கு இல்லை.

கே: ஏப்ரல் 20இல் அறிவித்தபோது, அடுத்த நாள் உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல் என்று அறிந்து, அதற்குரிய செயற்பாடுகளை நீங்கள் முன்னெடுக்கவில்லையா? அரசியல்வாதிகள் எவருக்கும் அறிவிக்கவில்லையா?

என்னால் முடிந்த செயற்பாடுகளை முன்னெடுத்தேன். உரியவர்களை அறிவுறுத்தினேன்.

கே: சஹ்ரான் குழுவை, குற்றப்புலனாய்வுப் பிரிவுதான் பிடித்திருக்க வேண்டும்?

ஆம். அதுதான் நடைமுறை. பொலிஸாரின் உதவியைக்கூட பெற்றிருக்க முடியும்.

கே: 2017க்குப் பின்னர் சஹ்ரான் பற்றிய தேடல்கள் தொடர்ந்தனவா?

ஆம். அது குறித்த புலனாய்வு, மீளாய்வுக் கூட்டத்தில் பேசப்பட்டது. நாலக டீ சில்வாவை அழைத்து, அதைப்பற்றி தெளிவாக விளங்கப்படுத்தினேன்.

கே: நாலக சில்வா, தேசிய தௌஹித் ஜமாஅத் அமைப்பை தடைசெய்ய முயற்சித்தாரா?

அதற்கான முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன.

கே: தாக்குதலின் பின்னர் உங்களை விலகுமாறு யாரிடமிருந்த அழுத்தம் கிடைத்தது? உங்களுக்கு முக்கியப் பதவியொன்று கிடைக்கவுள்ளதாகவும் கூறப்பட்டதா?

ஆம். 23ஆம் திகதி 6.30 மணிக்கு, ஜனாதிபதியைச் சந்திக்க வருமாறு அழைப்பு கிடைத்தது. அவரைச் சந்திக்கச் சென்றபோது, மேற்படித் தாக்குதல் பற்றி அவருக்கு அறிவிக்கப்படவில்லை என்பதால், என்னைப் பொறுப்பேற்றுக்கொண்டு பதவி விலகுமாறு கூறினார். தற்போது, எனக்கு வசிப்பிடம் ஒன்றுகூட உறுதியாக இல்லை. எனவே, அதற்கான ஏற்பாடொன்றைச் செய்து தருமாறு கோரினேன். அதற்குப் பிரதி உபகாரமாக, வெளிநாட்டுத் தூதுவர் பதவியொன்றைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால், அவ்வாறான எதிர்பார்ப்பு எனக்க இருக்கவில்லை. சாதாரண பொலிஸ் அதிகாரிகள், ஒரு நாளுக்கு 12 மணித்தியாலங்கள் கஷ்டப்படுகிறார்கள், அவர்களைக் காட்டிக்கொடுத்தால், அவர்களின் குடும்பமும் என்னை பழிக்கும். நான் கொலையாளி இல்லையெனும் போது, நான் ஏன் பதவி விலக வேண்டும்?
பொலிஸாரைக் காட்டிக்கொடுக்கும் எண்ணம் எனக்கு இருக்கவும் இல்லை. அதனால், எனது பொலிஸ் வாழ்க்கை பற்றி அவருக்குத் தெளிவுபடுத்தினேன். எவ்வாறாயினும், அன்றைய தினம் 8.30 மணியளவில், அனைத்து விடயங்களும் நடந்து முடிந்துவிட்டன.

அதனையடுத்து, 23ஆம் திகதி அழைபேசி மூலம் அழைத்து, கடிதம் இன்னும் எனக்கு வரவில்லை என்றார். நான் அமைதியாக இருந்தேன். அதனையடுத்து, 25ஆம் திகதி என்னைக் கட்டாய விடுமுறையில் செல்லுமாறு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .