2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

தாய்வான் வங்கி மோசடி: $1.3 மில். மீட்கப்பட்டது

Editorial   / 2017 ஒக்டோபர் 13 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்வான் வங்கியொன்றிலிருந்து பணம் கொள்ளையிடப்பட்டமை தொடர்பாக, இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், கொள்ளையிடப்பட்ட 1.3 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் பணத்தை மீட்டுள்ளதாக, இலங்கை அதிகாரிகள் நேற்று (12) தெரிவித்தனர். 

தாய்வான் வங்கியின் கட்டமைப்புக்குள் இணைய வழியாகப் புகுந்த கொள்ளைக் குழுவொன்று, 60 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைத் திருடியது என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இலங்கையிலும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

கொள்ளையிடப்பட்ட பணம், ஐக்கிய அமெரிக்கா, கம்போடியா, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த கணக்குகளுக்கு அனுப்பப்பட்டது. 

இந்நிலையில், கொழும்பிலுள்ள இரண்டு வங்கிகளில், பணத்தை மீளப்பெற முயன்ற இருவர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். அதிலொருவர், இலங்கைப் பாரம்பரியத்தைக் கொண்ட பிரித்தானிய பிரஜை ஒருவர் எனவும், மற்றையவர் இரண்டு நாடுகளினதும் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர் எனவும் தெரிவித்தனர். இவர்கள் இருவருக்கும், இந்தியர் இருவரே பணத்தை அனுப்பினர் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், விசாரணைகளின் வீச்சமும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 

“கடந்த வாரத்தில், பணப்பரிமாற்றம் இடம்பெற்றபோது, இரண்டு இந்தியர்களும், கொழும்பில் இருந்தனர். ஆனால் அதன் பின்னர், அவர்கள் தப்பித்துச் சென்றுவிட்டனர்” என, பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளையிடப்பட்ட பணத்தைப் பரிமாற்றுவதற்கான ஏற்பாட்டை, இந்தியர்கள் செய்தனர் எனவும், இதில் சம்பந்தப்பட்ட இலங்கையர்களுக்கு, பணத்தின் ஒரு பங்கு கிடைக்குமெனவும் இருந்தது என, பொலிஸார் தெரிவித்தனர். இந்த இந்தியர்களின் அடையாளம் தொடர்பான விவரம், இந்திய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுவிட்டது என, பொலிஸார் குறிப்பிட்டனர். 

கொள்ளையிடப்பட்ட 60 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலரின் பெரும்பகுதியை, ஏற்கெனவே மீட்டுவிட்டனர் என, தாய்வான் அதிகாரிகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .