2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

நடுவானில் ரகளை; இலங்கைப் பிரஜை மடக்கிப் பிடிப்பு

Kogilavani   / 2017 ஜூன் 02 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பறந்துகொண்டிருந்த விமானத்தில், ரகளையில் ஈடுபட்டது மட்டுமன்றி, சக பயணிகளைத் தாக்கிவிட்டு, விமானியின் அறைக்குள் நுழைவதற்கு முயன்றதுடன், விடாவிடின் தன்வசமுள்ள குண்​டை வெடிக்கவைக்கப் போவதாக அச்சுறுத்திய இலங்கைப் பிரஜையை, ​அவுஸ்திரேலிய பொலிஸார் கைதுசெய்தனர்.

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணிலிருந்து மலேசியாவின் கோலாம்பூருக்கு, விமான பணியாட்கள் அடங்கலாக 300 பேருடன் பறந்துகொண்டிருந்த எம்.எச்  128 என்ற விமானத்திலேயே, மேற்படி நபர் ரகளையில் ஈடுபட்டு அச்சுறுத்தியுள்ளார்.   

இலங்கையைச் சேர்ந்த 25 வயதான குறித்த நபர், புதன்கிழமையன்று விமானம் புறப்பட்ட 30 நிமிடங்களிலேயே ரகளையில் ஈடுபட்டுள்ளார். அந்த நபரை, மடக்கிப் பிடித்த விமான பணியாட்களும் பயணிகளும் விமான இருக்கைப் பட்டிகளால் இறுக்கக் கட்டியுள்ளனர்.   

விமானத்தில் ஒருவகையான அச்ச நிலைமை ஏற்பட்டது. பயணிகள், அச்சத்தில் உறைந்திருந்தனர். சமயோசிதமாகச் சிந்தித்த விமானி, விமானத்தை அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள ருலமறின் விமான நிலையத்துக்கு திருப்பினார். அந்த விமான நிலையம், சற்றுநேரம் மூடப்பட்டு பின்னர் திறக்கப்பட்டது.   

விமான நிலையத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டனர். விமானம் தரையிறக்கப்பட்டதும், விமானத்துக்குள் நுழைந்த பொலிஸார், அந்த நபரை மடக்கிப்பிடித்து, கைதுசெய்தனர். இந்த சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்பானது அல்லவென அவுஸ்திரேலியா பொலிஸ் கூறியது. இந்த மனிதன் மனநோயாளி. இவன் குண்டு என காட்டிய பொருள் புளூ டூத் ஒலி பரப்பி கருவி போன்று இருந்தது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். .   

விமானம் புறப்பட்டு 30 நிமிடம் கடந்த நிலையில், ஒரு பெண் விமானப் பயணி, ஆண் பயணி ஒருவரால் தாக்கப்பட்டார். எம்.எச் 128 விமானத்தில் சேவையிலிருந்த இப்பெண் பயத்தால் கூச்சலிட்டார் என பயணியான அரிப் சவுத்திரி டுவிட்டரில் கூறினார்.   

“சில பயணிகளும், விமான பணியாளர்களும் அந்த மனிதனை மடக்கிப்பிடித்து இருக்கைப் பட்டிகளால் கட்டி விமானத்தில் கிடத்தி அமுக்கி வைத்திருந்தனர்” என சவுத்திரி கூறினார்.   

“நாம் அதிர்ஷ்டசாலிகள் இது மிகவும் ஆபத்தானதாகவும் இருந்திருக்கலாம்”என்றும் கூறியுள்ளார்.  மெல்பேர்ணில் விமானம் இறங்கியதும் ஆயுதம் தாங்கிய பொலிஸார் விமானத்தினுள் வந்தனர். மனநோய் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்துவிட்டு சிகிச்சை நிலையத்திலிருந்து வெளியேறி ஒருசில மணிநேரத்தின் பின்னர் இவர் விமானசீட்டை வாங்கியுள்ளார். பொலிஸார் இவரை தமது பாதுகாப்பில் எடுத்துக் கொண்டனர்.   

மலேஷிய விசாரணைகள் முடியும் வரை விமானமோ அல்லது அதன் பணியாளர்களோ சேவையில் ஈடுபட அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அந்த செய்தி தெரிவிக்கின்றது. இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அவுஸ்திரேலியா அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.   

2014இன் பின்னர் இரண்டு விமான அனர்த்தங்களைக் கண்ட மலேஷியா இப்போது தான் மீட்சி கண்டு வந்தது. அவ்வேளையில் இந்த சம்பவம் அற்பமானது. ஆயினும் மலேஷிய விமான சேவைகள் மீது தொடர்ந்தும் பயத்தை உண்டாக்கியுள்ளது.   

கைது செய்யப்பட்ட, இலங்கைப் பிரஜை, அவுஸ்திரேலியாவில் செப் பயிற்சிகளில் (Chef Training) ஈடுபட்டு வந்தவர் எனவும் தகவல் வௌியாகியுள்ளது. சந்தேகநபர், மெல்பேர்ண்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதோடு, குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிக பட்சம் 10 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கபடும் எனவும் தெரியவந்துள்ளது.   

இதேவேளை, இலங்கையரான சேபால ஏக்கநாயக்க என்பவர், அல்தாலிய விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தை 1982ஆம் ஆண்டு கடத்தியமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X