Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2019 மார்ச் 21 , மு.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரின் நேற்றைய அமர்வில், மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலெடினால், இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட உத்தியோகபூர்வ அறிக்கையை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.
அவ்வறிக்கைக்கு, இலங்கை சார்பில் பதிலளித்த வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன, அவ்வறிக்கையில் உள்ள சகல விடயங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாதெனக் கூறியுள்ளார்.
ஐ.நா பிரேரணையிலுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த 2017ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசாங்கம் கரிசனையுடன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், காணாமல்போனோர் அலுவலகம் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவைச் செயற்படுத்துவது தொடர்பாகத் தற்போது அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு, பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு மாற்றீடான சட்டத்தை கொண்டுவருவது தொடர்பான செயற்பாடுகள், நாடாளுமன்றில் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்த அவர், நடப்பாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் விசேட தேவையுடையவர்களுக்காக 500 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பாக இதன்போது கருத்து வெளியிட்ட திலக் மாரப்பன, பிரித்தானியக் காலனித்துவத்தின் கீழ் இலங்கை காணப்பட்டிருந்த நிலையில் இவ்வாறான புதைகுழிகள் இனிவரும் காலத்திலும் கண்டுபிடிக்கப்படலாம். ஆனால், அதனை வேறுவிதமாகச் சித்திரிக்க முடிவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
கலப்பு நீதிமன்றப் பொறிமுறைக்காக, வெளிநாட்டுப் பிரஜைகளை உள்வாங்க இலங்கை அரசமைப்பில் இடமில்லையெனச் சுட்டிக்காட்டிய அமைச்சர் திலக் மாரப்பன, அவ்வாறாயின், இலங்கை அரசமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டுமென்றார்.
ஆணையாளர் கவலை
ஐ.நா பிரேரணையை நடைமுறைப்படுத்தாமை, நல்லிணக்கப் பொறிமுறை தாமதிக்கப்படுகின்றமை, நிலைமாறுகால நீதி பொறிமுறையை இலங்கை செயற்படுத்தாமை தொடர்பாக தனது கவலையை வெளியிட்ட ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்செலெட், காலவரையறை அடங்கிய திட்டமொன்றை அமுல்படுத்துமாறு கோரியுள்ளார்.
இலங்கை குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தயாரித்த அறிக்கை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது அமர்வில் நேற்று (20) சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், தனது உரையை நிகழ்த்திய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன், இலங்கையில், மரண தண்டனை அமுலாக்கல் குறித்தும் கவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகள் பேரவையுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றும் நிலையில், இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்கு மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 மற்றும் 34/1 தீர்மானங்களை அரசாங்கமும் அமுல்படுத்துவதற்கான ஆதரவை, தொழில்நுட்ப ரீதியான ஆதவை வழங்க ஐக்கிய நாடுகள் சபை தயாராக இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் தாமதங்கள் காணப்பட்டாலும் காணாமல் போனோர் அலுவலகம் இயங்குவது வரவேற்கத்தக்க விடயமாகும். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சிக்கலான நிலைமைகளை கருத்திற்கொண்டு, காணாமல் போனோரை தேடும் சிக்கலான நடவடிக்கையை அந்த அலுவலகம் மேற்கொண்டு வருகின்றது. இதேவேளை, இழப்புகளுக்கான அலுவலகத்தில் துரிதமாக ஆணையாளர்களை இலங்கை அரசாங்கம் நியமிக்குமென நாம் நம்புவதுடன், இவ்விரு அலுவலகங்களும் சுயாதீனமாக இயங்கவேண்டுமெனக் வலியுறுத்தியுள்ளது.
நீதிப்பொறிமுறையின் ஒரு பகுதியாகப் பாதுகாப்புத் துறையில் மேற்கொள்ளவேண்டிய முக்கியத்துவம் தொடர்பாகவும் குறிப்பிட்டுள்ள அவர், மறுசீரமைப்பு நடவடிக்கையில் மனித உரிமைகள் பதிவுகள் குறித்து விசாரணைக்குட்படுத்தப்படும் அதிகாரிகளை நீக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய தேவையுள்ளது. மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை உயர் பதவியொன்றில் நியமித்தமை கவலைதரும் ஒரு நடவடிக்கையாக உள்ளது. சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டங்களை மீறியதாக அவர் மீது, மிக மோசமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பதிலளிக்கும் கடப்பாட்டில் போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. 2009 மோதலில் இழைக்கப்பட்ட மிக மோசமான குற்றச்செயல்களுடன் தொடர்புடைய விடயங்களை கையாள்வதற்கான விசேட நீதிப் பொறிமுறையொன்றை நிறுவுவதில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு - கிழக்கில் படையினர் பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமித்திருக்கும் நிலையில் அவற்றை விடுவிப்பதற்குச் சில நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதை எம்மால் காணமுடிகின்றது. இந்த முக்கியமான நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டு பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கிட்டத்தட்ட 40 வருடங்களுக்குப் பின்னர் மரண தண்டடனையை இலங்கையில் அமுல்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் கவலை தருவதாக உள்ளது. இலங்கையில் சட்டவாட்சியை உறுதிப்படுத்துவதற்காக, ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படவேண்டிய தேவை இருப்பதாகவும் நாம் கருதுகின்றோம். தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் இந்த விடயத்தைக் கவனத்தில் கொள்ளமுடியும் என்றும் குறிப்பிட்டார்.
இந்தியா
13ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக அமுல்படுத்துமாறும், இலங்கைக்கு அழைப்பு விடுத்த இந்தியா, இலங்கையின் தமிழ் சமூதாயத்தினர் மீதான கடமை தங்களிடமுள்ளது என்றும் தெரிவித்தது.
சீனா
இலங்கை முகங்கொடுத்த சவாலை, சர்வதேச சமூகம் புரிந்துகொள்ளவேண்டுமென, சீனா தெரிவித்தது. இது, இலங்கை நிலையாக இருப்பதற்கு உதவும் என்றும் மனித உரிமை மீறல் பற்றி ஒரு வார்த்தையும் இல்லை என்றும் தெரிவித்தது.
கனடா
வழங்கிய வாக்குறுதிக்கமைய உரிய கால எல்லைக்குள் பிரேரணையை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமென, கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தான்
எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை, இலங்கை தோற்கடித்தது எனத் தெரிவித்த பாகிஸ்தான், இந்தியா தொடர்பிலான தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியது.
ஐ. ஒன்றியம்
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை, ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றது. காலவரையறைக்குட்பட்ட மூலோபாயத்தோடு, 30/1ஐ அமுல்படுத்துவதற்கு அழைப்பு விடுத்தது. அத்தோடு, இலங்கையுடன் இணைந்து பணியாற்றத் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தது.
சுவிட்ஸர்லாந்து
இலங்கையின் மாகாண சபைத் தேர்தல் இடைநிறுத்தப்பட்டுள்ளமைக்கு, சுவிட்ஸர்லாந்து கண்டனம் வெளியிட்டது. இலங்கையுடன் எவ்வாறு பணியாற்ற வேண்டுமென்ற தன்னுடைய திட்டங்களை, உயர்ஸ்தானிகர் விவரிக்க வேண்டும் எனத் தெரிவித்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago