2025 ஜூலை 21, திங்கட்கிழமை

நெற்றியை அசைத்து இரகசியம் கூறினாராம் ரணில்

Editorial   / 2018 மார்ச் 16 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்  

நல்லாட்சி அரசாங்கத்துக்குக் கடந்த வாரம் பெரும் தலையிடியாகவே இருந்தது. அதுமட்டுமன்றி, சர்வதேசமும் தங்களுடைய கண்களில் விளக்கெண்ணெயை ஊற்றிக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தன.

தங்களுடைய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு சில நாடுகள் பயணத்தடை விதித்திருந்தன என்பதுதான், அலரிமாளிகையில் கடந்தவாரம் இடம்பெற்ற சந்திப்புகளில் வெகுவாகப் பேசப்பட்டுள்ளன.  

மேற்குறிப்பிட்ட விவகாரங்களுக்கு, கண்டி நிர்வாக மாவட்டத்தில் ஏற்பட்டிருந்த பதற்றமே காரணமாக அமைந்திருந்தது. அந்தப் பதற்றத்தை உடனடியாகத் தணிப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென அரசாங்கத் தரப்பைச் சேர்ந்த பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.  

நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மாற்றத்தின் போது, சட்டமும் ஒழுங்கும் அமைச்சுப் பொறுப்பு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டது. அதனையடுத்து, அந்த விவகாரம் கட்சிக்குள்ளும் அரசாங்கத்துக்குள்ளும் வெகுவாகப் பேசப்பட்டது. அவ்வமைச்சும் பின்னர் மத்தும பண்டாரவுக்கு வழங்கப்பட்டது.  

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற பதவி ஆசை யாருக்குத்தான் இருக்காது. அதிலும் சூழ்ச்சிகளை செய்து பதவியைப் பெற்றுக்கொண்டதாக, அரசாங்கத்திலிருந்த பலருக்கெதிராக கடந்தகாலங்களில் குற்றஞ்சாட்டப்பட்டது.  

எனினும், நீண்டகால அனுபவமும் முதிர்ச்சியும், பொறுமையும் கொண்ட, ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு அப்பதவி வழங்கப்பட்டது சரியென, ஐ.தே.கவைச் சேர்ந்த பலரும் கூறியுள்ளனர். எனினும். அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் ​பொன்சேகாவுக்கே, அப்பதவி வழங்கப்படவேண்டுமென, இன்னொரு தரப்பினர் கூறிவருகின்றனர்.  

எது எப்படிப்போனாலும் பரவாயில்லை பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடமிருந்து, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சுப்பதவியை அபகரிக்க வேண்டுமென, அரசாங்கத்தில் இருக்கின்ற இரு தரப்பையும் சேர்ந்த இன்னும் சிலர் கங்கணம் கட்டியுள்ளதாகவும் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சுப்பதவியை சரத் பொன்சேகாவுக்கு வழங்கினால், சர்வதேச விசாரணைக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலையேற்படுமென, சட்டவல்லுநர்கள் ​வழங்கிய ஆலோசனையை அடுத்தே, ஜனாதிபதியும் பிரதமரும் அந்த விவகாரத்தில் கூடுதலாக ஆராய்ந்து, இறுதி முடிவை எடுத்துள்ளனரென, ஐ.தே.க தகவல் தெரிவிக்கின்றது.  

எது எப்படியோ, பிரதமருக்கு சட்டமும் ஒழுங்கும் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டதன் பின்னர்தான், கண்டி மாவட்டத்தில் குழப்பம் ஏற்பட்டது. ஆகையால், அரசாங்கமே சூழ்ச்சி ​செய்திருக்கலாமென, விமல் வீரவன்ச எம்.பி முன்வைத்திருந்த குற்றச்சாட்டை, ஆளும் தரப்பினர் முழுமையாக நிராகித்திருந்தனர்.  

கண்டியில் ஏற்பட்ட குழப்பத்தின் பின்னர், உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜப்பானுக்கு விஜயம் செய்துவிட்டார். ஆகையால், சகல பொறுப்புகளும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே பார்க்கவேண்டியதாயிற்று.

கடுமையான வேலைபளுவுக்கு மத்தியிலும் பிரதமர் தலைமையில் அலரிமாளிகையில் புதன்கிழமைகளில் நடைபெறும் சந்திப்புகள் யாவும் நடைபெற்றன. அந்தச் சந்திப்புகளின் போது, மிகவும் முக்கியமான விடயங்கள் மட்டுமே பேசப்பட்டன.

“கண்டியில் இனவாத நெருப்பு அணைந்துவிட்டு. இது திட்டமிட்ட ஒரு செயற்பாடாகும். அதனை நாடளாவிய ரீதியில் வியாபிப்பதற்கான சூழ்ச்சித் திட்டங்கள் தீட்டப்பட்டிருந்தன. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புத் துறையினரின் அர்ப்பணிப்பு ஆகியனவற்றால் அவை தடுத்து நிறுத்தப்பட்டது” எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இதன்போது தெரிவித்தார்.

குறுக்கிட்ட அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, “பொலிஸாரும் பாதுகாப்புத் தரப்பினரும் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாகவே, மக்கள் பாதுகாக்கப்பட்டனர். என்றாலும், பொலிஸில் பதவிநிலையில் இருக்கின்ற அதிகாரிகளுக்கு இடையிலான கருத்துமுரண்பாடுகளே, திகன சம்பவம் வியாபிபதற்குக் காரணமாக அமைந்தன” எனக் குறிப்பிட்டார்.  

“ஆமாம்... ஆமாம்... பொலிஸார் கயிலுத்துகொண்டிருந்தனர் என தகவல் வெளியாகியிருந்தது. என்றாலும் யாருடைய விமர்சனத்துக்கும் உள்ளானது போல, பாதுகாப்பில் பொலிஸாரே முன்னின்றனர்” எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது தெரிவித்துள்ளார்.

“ஆமாம்... சேர், நீங்கள் கண்டிக்கு வந்து, சேதங்களைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடியதை அந்த மக்கள் வரவேற்றனர். என்றாலும், கொஞ்சம் சுணங்கிவிட்டீர்களென, சிலர் முகம் சுளித்துகொண்டனர்” என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துவிட்டார்.

“அப்படியொன்றுமில்லை எனத் தெரிவித்த பிரதமர், கடந்த வெள்ளிக்கி​ழமையே கண்டிக்கு வருவதாக இருந்தேன். எனினும், அஸ்கிரிய மகாநாயக்க தேரர், அங்கிருக்காமையால் என்னுடைய பயணத்தை சனிக்கிழமைக்கு மாற்றிக்கொண்டேன். எனினும், சமாதானத்தை பாதுகாப்பதற்குத் தேவையான கட்டளைகளை விடுவதற்கு ஒரு நிமிடமேனும் சுணங்கவில்லை” என்றார்.

“தெல்தெனிய, திகன, மெனிஹின்ன, குண்டசாலை, ஆனமடுவ உள்ளிட்ட பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்களை குறைத்து மதிப்பிடமுடியாதென, தெரிவித்த அமைச்சர் நவீன் திஸாநாயக்க, முழுநாட்டுக்கும் தீ வைக்கும் வகையிலேயே இந்தச் செயற்பாடுகள் அமைந்திருந்தன. பல இடங்களில் பெற்றோல் குண்டுகள் பல மீட்கப்பட்டன” என்றார்.

“மொட்டுக்காரர்கள், காவியுடை தரித்தோர் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை, கடந்த வாரமே துரிதப்படுத்தப்படவிருந்தது. அதற்கிடையில், நல்லாட்சி அரசாங்கத்தை இடையிலேயே வீட்டுக்கு விரட்டிவிட்டு. சூழ்ச்சிகள் மூலம் ஆட்சியை கைப்பற்றுவதற்கான முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டன எனவும், அவையாவும் அம்பலமாகிவிட்டன” என, அங்கிருந்தவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரடியாகவே தெரிவித்துவிட்டனர்.

“இந்தச் சூழ்ச்சிக்கெல்லாம் பயப்பிடக்கூடாதெனத் தெரிவித்த அமைச்சர் வஜிர அபேவர்தன, பேஸ்புக், வைபர், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் தடைசெய்யப்பட்டமை, நல்லதென பலரும் கூறினர்” என்றார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்துரைத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சமூக வலைத்தளங்களைத் தடைசெய்வதற்கு நான் விரும்பவில்லை. தற்காலிகத் தடையால் தடுக்கப்பட்டது. என்றாலும், தொடர்ச்சியாக அதனை செய்யமுடியாது.  உலகமயமாக்கப்பட்டுள்ள நிலையில், எவ்வாறான அசௌகரியங்களை ஏற்படுத்தினாலும் அது சரிவராது என்று கூறியதுடன், தடையை நீக்குவதில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை​தானே, என அவ்விடத்திலிருந்த அமைச்சர் ஹரின் பெர்​ணான்டோவிடம் கேட்டுவிட்டார்.

“இல்லை சேர், தடையை நீக்குவதில் பிரச்சினை இல்லை, சில தடைகள் நீங்கப்பட்டுவிட்டன. இன்னும் சில விவகாரங்கள் தொடர்பில் வெள்ளிக்கிழமை முக்கிய கூட்டங்கள் இடம்பெறவுள்ளன” என்றார்.

தடையை நீக்குவதற்கான கதைகள் அத்தோடு நின்றாலும், புதிதாக அமைச்சு, பிரதியமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்ட 11 அமைச்சர்களுக்கும் நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டுவிட்டன. ஆனால், வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படாமையால், உத்தியோகபூர்வமான கடமைகளை ஏற்றுக்கொள்ளமுடியாதுள்ளது என, அங்கிருந்தவர்கள் பிரதமரிடம் தெரிவித்துவிட்டனர்.

ஒன்றுக்கும் பயப்பிடவேண்டாம். ஜனாதிபதி நாட்டில் இல்லை. அவர் நாடு திருப்பியவுடன், வர்த்தமானி அறிவித்தலில் ஒப்பமிடுவார். அதுவரையிலும், கடமைகளை செய்துகொண்டுபோங்கள், அடுத்த இலக்கு, குறித்து சிந்தியுங்கள் என அறிவுரை கூறியுள்ளார்.

“அது இல்லசேர், உள்ளூராட்சி மன்றங்களை நிறுவவேண்டும். தேர்தல் நிறைவடைந்து ஒருமாதத்துக்கு மேல் கடந்துவிட்டது” என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல நினைவுபடுத்திவிட்டார்.

“அது அரசாங்கத்தின் வேலையில்லையென தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு, தேர்தல்கள் ஆணைக்குழு ஆகியனவே அவற்றுக்குப் பொறுப்புக் கூறவேண்டும். சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரவேண்டும். தற்போதைய சூழ்நிலையில், அதனைச் செய்வது கடினமானதென, சட்டநிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர் என்று கூறியதுடன் நெற்றியை மட்டும் அசைத்துவிட்டு, எதுவுமே கூறாமல் சென்றுவிட்டாரென, அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். அதனையடுத்து, அலரிமாளிகை, அடுத்தக்கட்ட கூட்டத்துக்கு தயாராகிவிட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .