2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

Freelancer   / 2023 மார்ச் 29 , பி.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுமக்கள் பாடுபட்டு உழைத்த தமது பணத்தைப் பாதுகாக்குமாறும் இணையத்தளம், ஏனைய ஊடக வழிகள் மற்றும் நேரடியாக எவரேனும் ஆளின் மூலமாக வழங்கப்படும் ஏதேனும் கிறிப்டோ நாணய திட்டத்தில் முதலீடுசெய்யாமல் இருக்குமாறும் திட்டத்துடன் ஈடுபாடாது இருக்குமாறும் இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு எச்சரித்துள்ளது

இலங்கை மத்திய வங்கியினால் புதன்கிழமை (29) வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே  மேற்குறிப்பிட்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டதுடன், அதில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

“கிறிப்டோ” என்று பொதுவாக குறிப்பிடப்படும் மறைக்குறி நாணயங்களை ஊக்குவித்தல் மற்றும் முதலீட்டினை ஊக்குவிப்பதை வசதிப்படுத்தல் அத்துடன் விற்பனை செய்தல் என்பனவற்றில் ஈடுபடுகின்றவர்களை அத்தகைய நடவடிக்கைகளிலிருந்து தவிர்ந்திருக்குமாறும் மத்திய வங்கி வலியுறுத்துகின்றது.
 
பொதுமக்கள் விசாரணைகளையும் அவதானிக்கப்படும் அபிவிருத்திக்களையும் கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கியானது கிறிப்டோ நாணயங்களைப் பயன்படுத்துவதுடனும் முதலீடுசெய்வதுடனும் தொடர்புடைய குறிப்பிடத்தக்க இடர்நேர்வுகள் பற்றி பொதுமக்களுக்கு மீளவும் வலியுறுத்துகின்றது. 

கிறிப்டோ நாணயம் என்பது ஒரு நாட்டின் நாணய அதிகாரசபையினால் இன்றி தனியார் நிறுவனங்களினால் உருவாக்கப்படுகின்ற மெய்நிகர் நாணய வகையொன்றாகும். 
 
கிறிப்டோ – வர்த்தகம், இலாபகரமான முதலீடொன்றாக சில நிறுவனங்களினால் பரந்தளவில் ஊக்குவிக்கப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. 

எனினும், பொதுமக்கள் தாம் மேற்கொண்ட கிறிப்டோ முதலீடுகளின் மூலமாக பாரியளவில் நட்டங்களை சந்தித்துள்ளனர் என்றும் சில சந்தர்ப்பங்களில் கிறிப்டோவுடன் தொடர்புடைய திட்டங்களூடாக முன்னெடுக்கப்பட்ட நிதியியல் மோசடிகளுக்கும் ஆளாகின்றனர் என்றும் இலங்கை மத்திய வங்கிக்கு கிடைக்கப்பெறுகின்ற அண்மைய முறைப்பாடுகள் எடுத்துக்காட்டுகின்றன.

கிறிப்டோ நாணயத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் குறிப்பிடத்தக்க நிதியியல், தொழிற்பாட்டு, சட்ட மற்றும் பாதுகாப்புடன் தொடர்புடைய இடர்நேர்வுகள் அதேபோன்று வாடிக்கையாளர் பாதுகாப்பு கரிசனைகள் பற்றி இலங்கை மத்திய வங்கி 2018, 2021, அத்துடன் 2022,ஆம் ஆண்டுகளில் ஊடக வெளியீடுகளினூடாக ஏற்கனவே எடுத்துக்காட்டியுள்ளது. 
 
மேலும், கிறிப்டோ நாணயங்கள், இலங்கையில்  சட்டப்பூர்வமான நாணயமானவையல்ல என்பதுடன் நாட்டில் அவற்றின் பயன்பாட்டுடன் தொடர்புடைய ஒழுங்குமுறைப்படுத்தல் பாதுகாப்புக்களும் காணப்படவில்லை. 

கிறிப்டோ நாணயத்தை கொள்வனவு செய்வதற்கு பற்று அட்டைகள் மற்றும் கடனட்டைகள் போன்ற இலத்திரனியல் நிதிய மாற்றல் அட்டைகள் பயன்படுத்துவதற்கு  அனுமதிக்கப்படவில்லை. 

கிறிப்டோ நாணயம் முறைசாரா வழிகள் ஊடாக தொழிற்படுவதனால், தேசிய பொருளாதாரத்துக்கு அது பங்களிப்பதில்லை என்பதுடன் நாட்டின் பெறுமதிமிக்க வெளிநாட்டு நாணயத்தையும் இழக்க நேரிடுகின்றது.

கிறிப்டோ முதலீடுகளை அடிப்படையாகக்கொண்டு, உயர்ந்தளவான வருவாய்களுக்கான வாக்குறுதியுடன் தொழிற்படுகின்ற பல எண்ணிக்கையிலான நிதியியல் மோசடிகள் அதிகரித்து வருகின்றன தொடர்பிலும் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். 

கிறிப்டோ நாணயத்தில் பணத்தை முதலீடுசெய்வதன் மூலம் அதிகளவிலான வருமானத்தை வழங்குவதாக உறுதியளித்து தனிநபர்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து பணத்தைப் பெறுவதும் அதேபோன்று மோசடியான கிறிப்டோ நாணய திட்டங்களில் முதலீடுசெய்யுமாறு கூறி தனிப்பட்டவர்களை ஏமாற்றுவதும் இம்மோசடிகளில் உள்ளடங்குகின்றன என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .