Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2017 ஜூன் 30 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
'வித்தியா, எவரையும் காதலித்தாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், பெரியம்பி (6ஆவது எதிராளியான சிவதேவன் துஷாந்த்), வித்தியாவைக் காதலித்தார். வித்தியா அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததும், அவரைக் கடத்தித் தருமாறு, ரவி என்பவரிடம் பணம் கொடுத்தான்” என்று, வித்தியா படுகொலை வழக்கின் ஐந்தாவது சாட்சியும் சட்டமா அதிபரால் நிபந்தனைகளுடன் கூடிய பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட அரச தரப்பு சாட்சியுமான உதயசூரியன் சுரேஷ்கரன், “ட்ரயல் அட்பார்” முன்னிலையில் சாட்சியம் அளித்தார்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் விசாரணைகள், “ட்ரயல் அட்பார்” முறையில் நேற்று வியாழக்கிழமை (29), யாழ். நீதிமன்றக் கட்டட தொகுதியின் மூன்றாம் மாடியில், மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில், இரண்டாவது நாளாக இடம்பெற்றது.
நேற்றைய வழக்கு விசாரணையின் போது, பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தலைமையிலான அரச சட்டவாதிகளான நாகரத்தினம் நிஷாந்த், ஷகிப் ஸ்மாயில், லக்சி டீ சில்வா மற்றும் மாலினி விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.
அத்துடன், எதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் ஜெயக்குமார், பாலசிங்கம் தவக்குமார், மகாலிங்கம் சசிதரன், தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்த், பழனி ரூபசிங்கம் குகநாதன், ஜெயதரன் கோகிலன் மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிராளிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
அதேநேரம் 1ஆம், 2ஆம், 3ஆம், 5ஆம் மற்றும் 6ஆம் எதிராளிகள் சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி மஹிந்த ஜயவர்தன மற்றும் சட்டத்தரணி சுரங்க பாலசிங்க ஆகியோரும், 5ஆம் எதிராளியின் சார்பில், சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதியும் 4ஆம், 7ஆம், மற்றும் 9ஆம் எதிராளிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரனும், மன்றில் முன்னிலையாகி இருந்தனர். அத்துடன், 9 எதிராளிகள் சார்பிலும் நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தாவும், மன்றில் நேற்று ஆஜராகியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணைகள் ஆரம்பமாகின. அதன்போது, வழக்கின் ஐந்தாவது சாட்சியும் சட்டமா அதிபரால் நிபந்தனைகளுடன் கூடிய பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட அரச தரப்பு சாட்சியுமான உதயசூரியன் சுரேஷ்கரன், “ட்ரயல் அட்பார்” முன்னிலையில் சாட்சியம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
வித்தியாவைக் காதலித்த எதிராளி
“நான் புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்தனான். பல வருடங்களாக, கொழும்பிலுள்ள கடை ஒன்றில் வேலை செய்தேன். இந்த வழக்கு தொடர்பில், கொழும்பு 4ஆம் மாடியைச் சேர்ந்த புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், முதலில் என்னைக் கைது செய்து விசாரணை செய்த பின்னர் விடுவித்தனர். பின்னர் மீண்டும் நான் சில நாட்களில் கைது செய்யப்பட்டேன்.
“இந்த வழக்கு தொடர்பில், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றிலுள்ள நீதவானின் சமாதன அறையில் வைத்து, எனது வாக்குமூலத்தைப் பதிவு செய்திருந்தேன்.
“கொலை செய்யப்பட்ட வித்தியாவை எனக்குத் தெரியும். அவரது குடும்பத்தினரையும் எனக்கு நன்கு தெரியும். வித்தியா, எவரையும் காதலித்தாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், பெரியம்பி என அழைக்கப்படும் துஷாந்த் (6ஆவது எதிராளியான சிவதேவன் துஷாந்த்) என்பவர், வித்தியாவைக் காதலிப்பதாகக் கூறினார்.
“அதனால், நானும் பெரியம்பியும், வித்தியா பாடசாலைக்குச் செல்லும் நேரங்களிலும் பாடசாலையால் வீடு திரும்பும் நேரங்களிலும், பெரியம்பியின் மோட்டார் சைக்கிளில் வித்தியாவைப் பின்தொடர்ந்துச் செல்வோம். அவ்வேளைகளில், வித்தியாவுடன் பெரியம்பி கதைக்க முற்படுவார். ஆனால், வித்தியா கதைக்க மாட்டார். வித்தியா சில வேளைகளில், அவரது அண்ணாவுடன் மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்குச் சென்று வருவார். அண்ணா இல்லை என்றால் மாத்திரமே, அவருடைய சைக்கிளில் சென்று வருவார்.
“பெரியம்பியும் நானும், கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக, வித்தியாவின் பின்னால் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்தோம். அவ்வேளைகளில், அவருடன் கதைக்க முற்பட்டால் அவர் கதைப்பதில்லை. ஒரு நாள் தன்னுடன் கதைக்க வேண்டாம் எனவும் கூறினார்.
“கொலை செய்யப்படுவதற்கு ஒன்று ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஒரு நாள், வித்தியா பெரியம்பிக்கு செருப்பால் எறிந்து பேசினார். அப்போது நான், “அந்தப் பிள்ளைக்கு விருப்பம் இல்லை போல. அந்தப் பிள்ளையை விடு” என்று சொன்னேன்.
“நாங்கள், புங்குடுதீவில் மாப்பிளை என்பவரிடம் கள்ளு வாங்கிக் குடிப்போம். அவர் சீவல் தொழில் செய்பவர். அவரின் வீட்டுக்கு நானும் என்னுடன் கொழும்பில் இருந்து வந்திருந்த சந்திரஹாசன், நிஷாந்தன், கண்ணா மற்றும் சசி என்போரும் கள்ளு குடிக்கப் போறனாங்க. காலையில பத்து மணிக்கு முன்னர், நாம் கள்ளு குடிக்க போயிடுவோம்.
“சம்பவ தினத்துக்கு சில நாட்களுக்கு முன்னர், மாப்பிள்ளை வீட்டில் கள்ளு குடிச்ச பின்னர், மதியம் 12 மணி போல, பெரியம்பியும் நானும் கடற்கரை வழியாக வித்தியாவின் வீட்டுக்குச் சென்றிருந்தோம். நான் வீட்டுக்கு சற்று தொலைவில் நின்றுகொண்டேன். பெரியம்பி மாத்திரம் வீட்டுக்குச் சென்று பார்த்து விட்டு, ஒருவரும் வீட்டில் இல்லை என, திரும்பி வந்துக் கூறினான்.
“அன்று பின்னேரம் மீண்டும் கள்ளு குடிக்கப் போனோம். அப்போது, எம்முடன் சந்திரஹாசனையும் அவரது வீட்டுக்கு சென்று அழைத்துச் சென்றோம். நாங்கள் கள்ளு குடித்துக்கொண்டு இருந்தநேரம், அங்கே தவக்குமார் மற்றும் ரவி ஆகியோர் வந்திருந்தனர். அவர்களுடன் சேர்ந்து கள்ளு குடித்தோம்.
“அந்நேரத்தில் பெரியம்பி, வித்தியா தனக்கு செருப்பால் எறிந்து போட்டாள் என, தவக்குமாருக்கும் ரவிக்கும் கூறினான். அதற்கு ரவி, “நீ வித்தியாவை காதலிக்கிறியா?” எனக் கேட்டான். அதற்கு பெரியம்பி, “ஓம்” என்று சொன்னான்.
“பின்னர் போகும் போது ரவி, பெரியம்பிக்கு சொன்னான் “ஏதேனும் உதவி தேவை என்டால் சொல்லு. வித்தியாவை தூக்கித் தாறது என்றால் தூக்கித் தாரன்” என்று சொன்னான். அதற்கு பெரியம்பி, “தேவை என்றால் சொல்லுறேன்” எனச் சொன்னான். “அதன் பிறகு, இரண்டு மூன்று நாள் கழித்து நாங்கள் மாப்பிள்ளை வீட்டில் கள்ளு குடித்துக்கொண்டு இருந்த போது, அங்கே வந்த ரவியிடம், வித்தியாவை தூக்கித் தரச் சொல்லி பெரியம்பி கேட்டான். அப்போது அந்த இடத்தில் நானும் பெரியம்பி, ரவி, சந்திரஹாசன் மற்றும் தவக்குமார் ஆகியோர் இருந்தோம்.
“வித்தியாவை தூக்கி தாறது என்றால், எனக்கு 20 - 23 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும்” என, பெரியம்பிக்கு ரவி கூறினான். அதற்கு பெரியம்பி, தான் சம்பளம் எடுத்த உடனே பணத்தைத் தருவதாகக் கூறினான். அதன்படி, வித்தியாவை தூக்கித் தரக்கூறி, ரவிக்கு பெரியம்பி பணம் கொடுத்தான்” என, சுரேஷ்கரன் தனது சாட்சியத்தை அளித்தார்.
பதிலளிக்க மறுப்பு
அதன் போது, “எவ்வளவு பணம் ரவிக்கு கொடுக்கப்பட்டது?” என, பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம், சாட்சியத்திடம் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த சாட்சியம், “இந்தக் கேள்விகளுக்கு நான் பதிலளித்தால், எனது அம்மா மற்றும் தங்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும்” என, சாட்சியமான சுரேஷ்கரன் கூறினார்.
அப்போது, “ட்யல் அட்பார்” நீதிபதிகளில் ஒருவரான மாணிக்கவாசகர் இளஞ்செழியன், “பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியங்களின் பாதுகாப்பு சட்டங்களின் கீழ், சாட்சியத்துக்கான பாதுகாப்பை வழங்க முடியும். எனவே, சாட்சியத்தை தொடர்ந்து தெரிவிக்கவும்” என்று கூறினார்.
“ட்யல் அட்பார்”இன் தலைமை நீதிபதியான பாலேந்திரன் சசிமகேந்திரன், “நீராக விரும்பி தான் சாட்சியம் அளிக்க வந்துளீர். சட்டமா அதிபரின் நிபந்தனைகளுடன் கூடிய பொதுமன்னிப்பின் அடிப்படையில் சாட்சியம் அளிக்க ந்துள்ளீர்” என, சாட்சியத்திடம் கூறினார்.
அத்துடன், “ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் வாக்குமூலத்தைப் பதிவு செய்தபின்னர், உமக்கோ உமது குடும்பத்துக்கோ அச்சுறுத்தல் ஏற்பட்டதா?” எனவும் தலைமை நீதிபதி வினவினார்.
அதற்குப் பதிலளித்த சாட்சியம், “ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில், நீதவானின் சமாதான அறையில் வாக்குமூலம் அளித்தேன். அதனால், நான் வாக்குமூலம் அளித்தது எவருக்கும் தெரியாது” எனக் கூறினார்.
மூடிய அறைக்குள் சாட்சியம்
அதனையடுத்து, “ட்யல் அட்பார்” நீதிபதிகள் மூவரும், ஏகமனதாக முடிவெடுத்து ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களை வெளியேற்றி, மூடிய மன்றினுள் தொடர்ந்து குறித்த சாட்சியத்தின் சாட்சிப் பதிவுகளை மேற்கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
6 hours ago