2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி

George   / 2016 நவம்பர் 27 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாலை 6.05 மணிக்கு ஈகைச்சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

யுத்த காலத்துக்கு முன்னர் ஒவ்வொரு நவம்பர் மாதம் 27ஆம் திகதியும் மாவீரர் தினமாக விடுதலைப்புலிகளினால் அனுஷ்டிக்கப்பட்டு வந்தது.

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில், இம்மாவீரர் தினம் அனுஷ்டிப்பது சர்ச்சைக்குரிய விடயமாக பேசப்படுவதுடன் அரசாங்கத்தால் மாவீரர் தினம் அனுஷ்டிப்பதற்கு தடைவிதிக்கப்படுகின்றது.

நல்லாட்சி அரசினால் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்த மாத்திரம் அனுமதிக்கப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் துயிலும் இல்லங்கள் யுத்தகாலத்தின்போது அழிக்கப்பட்டு அங்கிருந்த கல்லறைகள் அகற்றப்பட்டு அந்த இடங்கள் இராணுவத்தினரின் பாவனையில் இருந்தது.

பின்னர், காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டபோது இம் மாவீரர் துயிலும் இல்ல காணிகளில் இருந்தும் இராணுவத்தினர் வெளியேறினர். இதற்கமைய மக்களால் இம்முறை துயிலுமில்லங்கள் துப்புரவு செய்யப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலிக்காக 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், ஈகைச்சுடர் ஏற்றி வைத்தார்.

இவ் அஞ்சலி நிகழ்வில், வடமாகாண சபையின் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், உறுப்பினர்கள் அனந்தி சசிதரன், சு.பசுபதிப்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.

யுத்தத்துக்கு முன்னர் இக்காணியினுள் 2,150 விடுதலைப்புலி உறுப்பினர்களுடைய உடலங்களும் 1,000 உறுப்பினர்களுடைய நினைவு நடுகற்களும் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X