.jpg)
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி 95 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. 1,124 நாட்களுக்கு பினார் வெளிநாடு ஒன்றில் இந்தியா அணி பெற்றுள்ள முதலாவது டெஸ்ட் வெற்றி இதுவாகும். லோர்ட்ஸ் மைதனத்தில் 28 வருடங்களின் பின்னார் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ள அதேவேளை, லோர்ட்ஸ் மைதானத்தில் இந்தியா அணி பெற்றுள்ள இரண்டாவது வெற்றி இதுவாகும்.
இங்கிலாந்தில் வைத்து 54 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா அணி பெற்றுள்ள ஆறாவது வெற்றி இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் இந்தியா அணி 5 போட்டிகள் அடங்கிய தொடரில் 2 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 1 - 0 என்ற நிலையில் முன்னிலை பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணி தமது இரண்டாவது இன்னிங்சில் 319 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பாடியது. இறுதியாக 223 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்களையும் இழந்தது. இதில் ஜோ ரூட் 66 ஓட்டங்களையும், மூயேன் அலி 39 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் இஷாந்த் ஷர்மா 7 விக்கெட்களைக் கைப்பற்றினார். இது அவருடைய சிறந்த பந்துவீச்சு பெறுதியாக அமைந்த அதேவேளை இங்கிலாந்தில் வைத்து இந்தியா பந்துவீச்சாளர் பெற்றுக் கொண்ட சிறந்த பந்துவீச்சு பெறுதியாகவும் அமைந்துள்ளது. இரண்டவாது இன்னிங்சில் இந்தியா அணி சகல விக்கெட்களையும் இழந்து 342 ஓட்டங்களைப் பெற்றது. இதில் முரளி விஜய் 95 ஓட்டங்களையும், ரவீந்தர் ஜடேஜா 68 ஓட்டங்களையும், புவனேஸ்வர் குமார் 52 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் லியாம் பிளங்கட் மூன்று விக்கெட்களையும், பென் ஸ்டோக்ஸ் மூன்று விக்கெட்களையும், மூயேன் அலி இரண்டு விக்கெட்களையும் கைபற்றினர்.
இந்தியா அணி தமது முதலாவது இன்னிங்சில் 295 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அஜிங்கையா ரெஹானே 103 ஓட்டங்களையும், புவனேஸ்வர் குமார் 36 ஓட்டங்களையும் பெற்றனர். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஜேம்ஸ் அன்டர்சன் 4 விக்கெட்களையும், ஸ்டுவோர்ட் ப்ரோட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்சில் 319 ஓட்டங்களைப் பெற்றது. கரி பலன்ஸ் 119 ஓட்டங்களையும், லியாம் பிளங்கட் ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார் 6 விக்கெட்களைக் கைப்பற்றினர். ரவீந்தர் ஜடேஜா 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
போட்டியின் நாயகனாக இஷாந்த ஷர்மா தெரிவு செய்யப்பட்டார்.