
ஜேர்மனி அணிக்கு கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த தலைவர் பிலிப் லாம், தான் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 30 வயது மட்டும் நிறைவடைந்துள்ள லாம் இன்னமும் சர்வதேசப் போட்டிகளில் விளையாடக் கூடிய நிலை இருந்தும் தன் ஓய்வை அறிவித்துள்ளார்.
2004 ஆம் ஆண்டு ஜேர்மனி தேசிய அணிக்காக விளையாட ஆரம்பித்த லாம் 10 வருடங்களில் 113 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த 3 உலகக்கிண்ண தொடர்களிலும் விளையாடியுள்ள லாம், 2010ஆம் ஆண்டு உலகக் கிண்ண தொடரில் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அப்போதைய ஜேர்மனி அணியின் தலைவர் மிக்கேல் பலக் உபாதையடைந்து விளையாட முடியாமல் விலக உலகக்கிண்ண தொடரில் வைத்து தலைவராக பொறுப்பை ஏற்றுக் கொண்டார் பிலிப் லாம்.
மூன்றாம் இடத்தை 2010ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தில் ஜேர்மனி பெற்றது. இம்முறை சம்பியன் பட்டம் வென்றது. பின் வரிசை வீரராக விளையாடிய லாம் 5 கோல்களை சர்வதேசப் போட்டிகளில் அடித்துள்ளார். குறைந்த வயதில் உலகக்கிண்ணத்திற்கு தலைமை தாங்கிய ஜேர்மனி தலைவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. 26 வயதில் தலைமை தாங்கி இருந்தார். மூன்று உலகக் கிண்ணத்திலும் 18 போட்டிகளில் விளையாடியுள்ள லாம் 13 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளார். 2 போட்டிகளில் சமநிலை முடிவையும், 3 போட்டிகளில் சமநிலை முடிவைப் பெற்றுள்ளார். ஒரு தடவை சம்பியன் பட்டத்தையும், 2 தடவைகள் மூன்றாமிடத்தையும் ஜேர்மனி இவர் விளையாடிய காலத்தில் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.