
தடைக்குள்ளாகியுள்ள பங்களாதேஷ் அணியின் வீரர் ஷகிப் அல் ஹசன், பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். அத்துடன் தன்னுடைய தடை தொடர்பாக மீள் பரிசீலனை செய்யுமாறும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றைய தினம் கிரிக்கெட் சபையின் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரி நிஷமுடீன் சௌத்ரி உடன் நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்தே இந்த இந்த கோரிக்கையை விடுத்து, தான் நடந்து கொண்ட விதம் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, அணி மற்றும் ரசிகர்களுக்கு பிழையானதாக இருப்பதனால் அனைவரிடம் மன்னிப்பு கோருகின்றேன் என ஷகிப் அல் ஹசன் தனது அறிக்கையில் கூறியுள்ளார். தொழில் சார் கிரிக்கெட் வீரராகவும், பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் ஒப்பந்தத்துக்கு உட்ப்பட்ட வீரராகவும் நான் நடந்து கொண்ட விதம் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள ஷகிப் அல் ஹசன், இனி வரும் காலங்களில் தன்னை மாற்றி ஒழுக்கமானவனாக நடந்து கொள்வேன் எனவும் தனது அறிகையில் கூறியுள்ளார்.
தான் சர்வதேசப் போட்டிகளில் இருந்து விலகி விடுவேன் என பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துரசிங்ஹ இற்கு சவால் விட்டதன் பின்னர் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை இவருக்கு எதிராக மிகக் கடுமையாக நடந்து கொண்டது. இந்தியா அணியுடனான போட்டியில் மனைவியை ஒருவர் கிண்டல் செய்தமைக்காக வீரர்கள் செல்ல முடியாத பகுதிக்கு சென்று அவரை தாக்கியது உட்பட மேலும் பல ஒழுங்கீன செயற்பாடுகளுக்காக இவரை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை 6 மாதத்துக்கு தடை செய்ததுடன், வெளிநாட்டு தொடர்களில் விளையாடும் வாய்ப்புகள் அதிகமாக கிடைத்தமையினாலேயே இவர் சவால் விட்டார் என்ற காரணத்தினால் 2015ஆம் ஆண்டு நிறைவு வரை வெளிநாட்டில் இடம்பெறும் எந்த தொடர்களிலும் விளையாட அனுமதி வழங்கப்படாது எனவும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்தது.
கிரிக்கெட் விளையாடாமல் இருப்பது என்பது மிகப் பெரிய வலி. அதை சமாளிப்பது கடினம். எனவே மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபையிடம் ஹசன் கோரியுள்ளார். இதை உறுதி செய்துள்ள பதில் பிரதம நிறைவேற்று அதிகாரி நிஷமுடீன் சௌத்ரி, குறித்த கோரிக்கையை தான் பணிப்பாளர் சபைக்கு அனுப்பியுள்ளதாகவும் தேவை ஏற்படின் அவர்கள் ஷகிப் அல் ஹசனுடன் நேரடி சந்திப்பில் ஈடுபடுவார்கள் எனவும் இல்லாவிடில் கிரிக்கெட் சபை தலைவர் நஸ்முள் கான் இது தொடர்பான இறுதி முடிவை எடுப்பார் எனவும் நிஷமுடீன் சௌத்ரி தெரிவித்துள்ளார்.