2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு ஐ.சி.சி எச்சரிக்கை

A.P.Mathan   / 2014 ஜூலை 28 , பி.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜடேஜா, அன்டர்சன் ஆகியோர் மோதல் தொடர்பான கருத்துகளை வெளியிட வேண்டாம் என சர்வதேசக் கிரிக்கெட் பேரவை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணித் தலைவர்களுக்கு அறிவித்தல் வழங்கியுள்ளது. 
 
ஜடேஜா தண்டிக்கப்பட்டமைக்கு எதிராக தனது கருத்துகளை இந்தியா அணித் தலைவர் டோனி அண்மையில் வெளியிட்டு இருந்தார். இதன் பின்னரே இந்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. போட்டி மத்தியஸ்தரினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை மதிக்குமாறும், தாம் போட்டி மத்தியஸ்தர் டேவிட் பூனுக்கு பக்க பலமாக இருப்போம் எனவும் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவிட் ரிச்சட்சன் தெரிவித்துள்ளார். டேவிட் பூனின் விசாரணைகள் தமக்கு திருப்பி அளித்துள்ளதாகவும் அவர் எடுத்துச் செல்லும் நடவடிக்கைகள் திருப்பதியாக இருப்பதாகவும் தெரிவித்த ரிச்சட்சன், விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் நிலையில் சம்மந்தப்பட்ட அனைவரும் மௌனம் காப்பது விசாரணைகளுக்கு உதவும் என கூறிய அவர் தொடர்ந்து நடைபெறும் நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்துகள் வெளியிடாமல் தமது பணிகளுக்கு உதவுமாறும் கோரியுள்ளார். 
 
அத்துடன் இந்த விசாரணை நடவடடிக்ககைகள் துரித கதியில் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
 
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது போட்டியின் இரண்டாம் நாளில் ஜேம்ஸ் அன்டர்சன் தகாத வார்த்தைப் பிரயோகங்களை ஜடேஜா மீது பாவித்ததாகவும், ஜடேஜா அவரை ஆக்ரோஷமாக பார்க்க அவரை அன்டர்சன் தள்ளி விட்டார் என்ற பிரச்சினை தொடர்பான விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்தியா, அன்டேர்சனை இந்த தொடரில் இருந்து விலக்கவே இந்த நாடகத்தை நடாத்துகின்றது என இங்கிலாந்து அணித் தலைவர் அலஸ்டயர் குக் கூறியிருந்தார். ஜடேஜா விதிமுறைகளை மீறி நடந்துள்ளார் எனக் கூறி போட்டி ஊதியத்தின் 50 சதவீதத்தை அவருக்கு சர்வதேசக் கிரிக்கெட் பேரவை அபராதமாக வழங்கியது. இந்த நிலையில் இந்த தண்டனை தனக்கு மன உடைவை ஏற்படுத்தியுள்ளது எனவும், இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் கடுமையாக இந்தியா அணித் தலைவர் விமர்சித்து இருந்தார்.    
 
இதன் பின்னரே சர்வதேசக் கிரிக்கெட் பேரவை குறித்த அறிவித்தலை வழங்கியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .