2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

பாகிஸ்தானையும் மழையையும் வென்றது இலங்கை

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 10 , பி.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது. 21 ஓவர்களில் 99 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பாடிய இலங்கை அணி 16.2 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது. இலங்கை அணி வெற்றி ஓட்டத்தைப் பெற்று ஒரு நிமிடத்திற்குள் மழை வந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை அணி 21 ஓவர்களில் வெற்றி பெற முடியும் என்ற நிலை இருந்தது. மழை குறுக்கிட முன்னர் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் இலங்கை அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றமை முக்கிய விடயமாக அமைந்தது. 
 
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அஞ்சலோ மத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களையும், மஹேல ஜெயவர்தன 26 ஓட்டங்களையும் பெற்றனர். ஜுனைட் கான் இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினார். பாகிஸ்தான் அணி தமது இரண்டாம் இன்னிங்சில் 180 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. இதில் சப்ராஸ் அஹமட் ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களையும், மிஸ்பா உல் கக் 26  ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரங்கன ஹேரத் 6 விக்கெட்களைக் கைப்பற்றினர். டில் ருவான் பெரேரா 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 
 
இலங்கை அணி தமது முதல் இன்னிங்சில்  9 விக்கெட் இழப்பிற்கு 533 ஓட்டங்களைப் பெற்றது. இதில் குமார் சங்ககார 221 ஓட்டங்களையும், அஞ்சலோ மத்தியூஸ் 91 ஓட்டங்களையும்,   கௌஷால் சில்வா 64 ஓட்டங்களையும், மஹேல ஜெயவர்த்தன 55 ஓட்டங்களையும்  பெற்றனர். குமார் சங்ககராவின் 37 வது டெஸ்ட் சதம் இதுவாகும். கூடுதலான சதங்களை அடித்தவர்களில் குமார் சங்ககார ஐந்தாமிடத்திற்கு முன்னேறியுள்ளார். கூடுதலான இரட்டைச் சதங்களைப் பெற்றவர்களில் இரண்டாமிடத்தை தனதாக்கியுள்ளார். இது அவரின் 10வது இரட்டைச் சதமாகும். லாரா 9 இரட்டைச்சதங்களை பெற்றுள்ளார். கூடுதலான 12 இரட்டைச் சதங்களை சேர் டொன் பிரட்மன் பெற்றுள்ளார். 
 
பாகிஸ்தான் அணி தமது முதல் இன்னிங்சில் 451 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்களையும் இழந்தது. இதில் யூனுஸ் கான் 177 ஓட்டங்களையும், ஆஷாட் ஷபீக் 75 ஓட்டங்களையும், சப்ராஸ் அஹமட் 55 ஓட்டங்களையும், அப்துர் ரெஹ்மான் 50 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் இங்கை அணி சார்பாக டில்ருவான் பெரேரா 5 விக்கெட்களையும், ரங்கன ஹேரத் 3 விக்கெட்களையும், தம்மிக்க பிரசாத் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 
 
இரண்டாம் இன்னிங்சில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்த ரங்கன  ஹேரத் போட்டியின் நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X