
இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியில் திமுத் கருணாரத்ன மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். திமுத் கருணாரத்ன ஆரம்ப துடுப்பாட்ட வீரர். இவர் ஏற்கெனவே அணியில் இருந்த போதும் போதியளவு ஓட்டங்களைப் பெறாமையினால் அணியில் இருந்து நீக்கப்பட்டு உப்புல் தரங்க அணியில் இணைக்கப்பட்டார். ஆனாலும் உப்புல் தரங்க போதியளவு ஆரம்பத்தை வழங்காமையினால் அடுத்த போட்டியில் அவர் நீக்கப்பட்டு திமுத் கருணாரத்ன விளையாட வாய்ப்புக்கள் உள்ளன.
பினுர பெர்னாண்டோ 6 அடி 7 அங்குலம் உயரமுள்ள 19 வயது பந்துவீச்சாளர் ஆவார். டி.எஸ். சேனநாயக்க கல்லூரியை சேர்ந்த இவர், கடந்த இரண்டு வருடங்களாக சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் என்ற விருதைப் பெற்றவர் ஆவார். இலங்கை அணியின் 3 முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் உபாதையடைந்துள்ளமை இவருக்கு அணியில் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. நுவான் பிரதீப், சுரங்க லக்மால் ஆகியோர் அணியை விட்டு வெளியேறியுள்ளனர். கடந்த போட்டியில் சமின்ட எரங்க விளையாடிய போதும் முழுமையாக அவர் குணமடையவில்லை. எனவே அடுத்த போட்டியில் அவர் விளையாடும் வாய்ப்புக்கள் மிகக் குறைவு. இந்த நிலையும் பினுர பெர்னாண்டோ இறுதிப் 11 பேரில் விளையாட வாய்ப்புகள் இல்லை என இலங்கை அணியின் முகாமையாளர் மிச்சல் டி சொய்சா தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தை அவர் கூறவில்லை. உயர்தரப் பரீட்சைகள் காரணமாகவே இவர் இறுதி அணியில் விளையாட மாட்டார் என நம்பப்படுகின்றது. பினுர பெர்னாண்டோ இதுவரை முதற்தரப் போட்டிகளிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.