
இந்தியா அணியுடனான ஒருநாள்ப் போட்டிக்கான தொடரில் இங்கிலாந்து வீரர் ரவி போபரா சேர்த்துக் கொள்ளப்படாமைக்கு தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். நான் அணியில் இணைக்கப்படவில்லை என்பது மிகப்பெரியளவில் அதிர்ச்சியை தந்தது. சாதரணமாக தெரிவுக்குழுவில் இருந்து அழைப்பு வந்தால் போட்டிக்குத் தயாராகுங்கள் என்ற அறிவித்தல் வரும். ஆனாலும் இந்தமுறை அழைப்பில் மன்னிக்கவும் என்ற செய்தி வந்தது. எனக்கு இது எப்போதும் இல்லாதவாறு அதிர்ச்சியை தந்தது.
ஆனால், அணியில் என்னை இணைக்காமல் விட்டதன் மூலம் என்னை மேலும் போராட வைத்துள்ளனர். இந்த விடயம் எனக்கு மேலதிக உந்துதலை வழங்கியுள்ளது. போராடி என்னுடைய திறமைகளை மேலும் காட்டி தெரிவுக்குழுவும், தலைவரும் தாங்கள் எடுத்த முடிவு பிழை என உணர வைப்பேன் என ரவி போபரா சூழுரைத்துள்ளார்.
உலகக்கிண்ண அணியில் தான் இடம் பிடிப்பேன் எனக் கூறியுள்ள போபரா இந்த தொடருக்கு பின்னர் இலங்கை அணியுடன் 7 ஒருநாள்ப் போட்டிகளிலும், இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளுடனான முக்கோண ஒருநாள்ப் போட்டித் தொடரிலும் தான் இடம்பிடித்து சிறப்பாக விளையாடுவேன் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இலங்கை அணியுடன் நிறைவடைந்த ஒருநாள்ப் போட்டித் தொடரில், ரவி போபரா 5 போட்டிகளில் 71 ஓட்டங்களை மாத்திரமே பெற்று இருந்தார். ஒரு போட்டியில் அரைச் சத்தை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் 1 விக்கெட்டை மாத்திரமே கைப்பற்றி இருந்தார். இந்த வருடத்தில் விளையாடிய 13 போட்டிகளில் 220 ஓட்டங்களை பெற்றதோடு 7 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.