2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

நான் இல்லாமல் அணியை கட்டியெழுப்ப முடியுமா?: யூனுஸ் கான்

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 28 , மு.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர் யூனுஸ் கான், தான் இல்லாமல் பாகிஸ்தான் அணியைக் கட்டி எழுப்புமாறு கோபமான கருத்துகளை வெளியிட்டுள்ளார். ஐக்கிய அரபு ராட்சியத்தில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலியா அணியுடனான ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கு யூனுஸ் கான் தெரிவு செய்யப்படவில்லை. இதன் காரணமாக உலகக்கிண்ண தொடருக்கான அணியில் அவர் இடம் பெறும் வாய்ப்புகளும் இல்லாமல் போயுள்ள நிலையிலேயே குறித்த கருத்துகளை அவர் வெளியிட்டுள்ளார். 
 
என்னை இனி அணியில் சேர்க்க வேண்டாம். டெஸ்ட் அணியிலும் சேர்க்க வேண்டாம். நான் கிரிக்கெட்டை தியாகம் செய்கின்றேன் என கூறியுள்ள யூனுஸ் கான், இளையவர்கள்தான் ஒரு நாள்ப் போட்டிகளின் எதிர்காலம் என்றால் பாகிஸ்தான் டெஸ்ட் எதிர்காலம் எங்கே என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். என்னை டெஸ்ட் அணியில் சேர்க்கவேண்டாம். இளையவர்களை வைத்தே டெஸ்ட் எதிர்காலத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த இளையவர்கள் ஒரு நாள் அணியையும், டெஸ்ட் அணியையும் சரியாக அமைக்க முடியாமல் போனால் மீண்டும் என்னை அழைப்பார்கள எனவும் மேலும் தெரிவித்துள்ளார். 
 
நான் இப்போது இறக்க மாட்டேன். இன்னும் 5 மாதங்களில் எனக்கு 70 வயதும் ஆகி விடாது. என்னை உரிய கௌரவத்துடன் விளையாட விடவில்லை. என்னை காயப்படுத்தி விட்டார்கள். 35, 36 வயதாகிவிட்டால் எதிர்காலம் இல்லை என்றால் என்னைப் போன்றவர்கள் எங்களை சுட்டுக் கொள்வதா? என்னைப் போன்றவர்கள் காலை 7 மணிக்கு எழும்பி எங்கள் ஈடுபாட்டைக் காட்ட முடியும் எங்களை சுட்டுக்கொள்ளாமல். . எனக்கு எதிர்காலம் இல்லை என்று சொல்கின்றார்கள். 4, 5 மாதங்கள் இருந்து பார்ப்பேன். அணியை சரியாக இறுக்கமாக அவர்கள் கட்டி எழுப்பினால் நான் மீள வரமாட்டேன். இப்போது ஓய்வு பெறமாட்டேன் என யூனுஸ் கான் தெரிவித்து உள்ளார். 
 
பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய வீரர்களை பெருமை சேர்த்தவர்களை இவ்வாறு அவதூறாக நடாத்துவது வழமையாகி வருகின்றது. ஜாவிட் மியாண்டர்ட், இன்சமாம் உல் ஹக், மொஹமட் யூசுப் என எல்லோரும் இவ்வாறே நடாத்தப்பட்டனர். பாகிஸ்தான் கொடியை தூக்கியவர்களை இவ்வாறு நடத்தாதீர்கள். பின்னர் இளையவர்கள் யாரும் அணிக்காக விளையாட வரமாட்டார்கள். அணியில் இடம் பிடித்த போது நான் தெரிவிக்குழுவினருடன் பேசுவதில்லை. தொலைபேசியிலோ, ஊடகங்களிலோ அவர்களுக்கு ஆதரவு கருத்துகளை கூறுவதில்லை. இவையா நான் செய்த தவறு? 2009ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பந்தை சேதப்படுத்தியதாக இங்கிலாந்து ஊடகங்கள் கடுமையாக விமரசித்த போது நான் பாகிஸ்தானுக்காக நின்றது தவறா? 2009 ஆம் ஆண்டு உலக டுவென்டி டுவென்டி தொடரில் சம்பியன் ஆகிய போது நான் தலைவராக இருந்தது தவறா? அப்படியானால் இளையவர்களுக்கு நான் சொல்வது பாகிஸ்தான் அணிக்கு விளயாட வேண்டாம். அதை நினைத்தும் பார்க்கவேண்டாம் என கடுமையான, கோவமான  தனது கருத்துகளை யூனுஸ் கான் வெளியிட்டுள்ளார். 
 
இலங்கை அணியுடனான தொடரில் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் யூனுஸ் கான் இடம்பெற்ற போதும் உறவினர் ஒருவரின் இறப்பு காரணமாக அணியில் இருந்து விலகினார் யூனுஸ் கான். ஒன்றரை வருடங்களுக்கு பின்னர் இவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.  2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் இவர் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் சதம் எதனையும் பெற்றதில்லை. அத்துடன் 2013 ஆம் ஆண்டு விளையாடிய 8 போட்டிகளில் 32 ஓட்டங்களே கூடுதலான ஓட்டங்கள் ஆகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .