
உலகத்தில் உயரமான இடத்தில் விளையாடப்பட்ட கிரிக்கெட் போட்டி என்ற புதிய உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆபிரிக்க கண்டத்தின் டன்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ மலைத்தொடரின் உயரிய பகுதியில் இந்தக் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுள்ளது. ஓர் அணிக்கு 10 ஓவர்கள் கொண்ட போட்டியாக இந்தப் போட்டி விளையாடப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 5,730 மீற்றர்கள் உயரத்தில் இந்த போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டி நடைபெற்ற இடத்திற்கு அருகில் 5,895 மீற்றர் உயரத்தில் உறங்கு நிலையில் எரிமலை உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் 5,165 மீற்றர் உயரத்தில் ஹிமாலயாவில் எவரெஸ்ட் மலையில் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு போட்டியே உலக சாதனை போட்டியாக இருந்து வந்தது.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியின் உப தலைவி நைட் தலைமையிலான கொரிலாஸ் அணி 18 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. 10 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 82 ஓட்டங்களை கொரிலாஸ் அணி பெற்றுக்கொண்டது. இங்கிலாந்து முன்னாள் வீரரான ஆஷ்லி ஜைல்ஸ் தலைமையிலான ரைநோஸ் அணி 10 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 64 ஓட்டங்களைப் பெற்றனர். இந்தப் போட்டியில் மகயா நிட்டினி, ஸ்டீபன் ஸ்மித் ஆகியோரும் பங்கு பற்றி இருந்தனர்.
நிதி சேகரிப்புக்காக நடைபெற்ற இந்தப் போட்டியில், 8 நாட்கள் மலையேறி குறித்த உயரத்திற்கு சென்று இந்த போட்டியில் பங்குபற்றியவர்கள் விளையாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.