A.P.Mathan / 2015 ஜனவரி 22 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்க, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் விளையாடும் ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது போட்டியிலும் வெற்றிபெற்றதன் மூலம் தொடரை தனதாக்கிக்கொண்டுள்ளது தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி.
ஈஸ்ட் லண்டனில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. ஆயினும் தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சு மேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாட்ட வரிசையைச் சிதைத்து 33.4 ஓவர்களிலேயே 122 ஓட்டங்களுக்குள் சுருட்டிவிட்டது.
மேற்கிந்தியத் தீவுகளின் சார்பில் மார்லன் சமுவெல்ஸ் அதிகபட்சமாக 26 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கெய்ல் ஓர் ஓட்டத்துடன் வெளியேறி ஏமாற்றமளித்தார்.
பந்து வீச்சில் தென்னாபிரிக்காவின் இம்ரான் தாஹிர் 4 விக்கெட்களையும் பிலென்டர் 3, ஸ்டெய்ன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
குறைந்ததொரு எண்ணிக்கையை இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 24.4 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது. அம்லா 61 ஓட்டங்களுடனும், டு பிளெஸிஸ் 51 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது போட்டியை நிறைவு செய்தனர்.
போட்டியின் நாயகனாக ஆரம்ப விக்கெட்டுக்களை கைப்பற்றி மேற்கிந்தியதீவுகள் அணியை தடுமாறச்செய்த பிலென்டர் தெரிவானார்.
இந்தப் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம், தொடரில் இரண்டு போட்டிகள் மீதமிருக்கும் நிலையிலேயே தென்னாபிரிக்க அணி தொடரைக் கைப்பற்றிக்கொண்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .