A.P.Mathan / 2015 ஜனவரி 23 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், நியூஸிலாந்து அணி 108 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் நியூஸிலாந்து அணியை துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. அதற்கிணங்க, 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 360 ஓட்டங்களைக் குவித்தது நியூஸிலாந்து.
93 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நியூஸிலாந்து அணிக்கு, அதிர்ச்சியூட்டும் விதத்தில் கிறான்ட் எலியோட் மற்றும் லூக் ரொன்சி ஆகியோரின் துடுப்பாட்டம் அமைந்திருந்தது. 6ஆவது விக்கெட்டுக்காக 267 ஓட்டங்களைக் குவித்து, இருவரும் உலக சாதனை படைத்தனர். கிறான்ட் எலியோட்- ஆட்டமிழக்காமல் 96 பந்துகளில் 2 ஆறு ஓட்டங்கள், 7 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 104 ஓட்டங்களைப் பெற்றார். லூக் ரொன்சி - ஆட்டமிழக்காமல் 99 பந்துகளில் 9 ஆறு ஓட்டங்கள், 14 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 170 ஓட்டங்களைக் குவித்தார்.
இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் சார்பில் நுவான் குலசேகர மற்றும் லஹிரு திரிமன்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 43.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 252 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 108 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிக்கொண்டது.
அதிகபட்சமாக திலகரட்ண டில்ஸான் 116 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இது அவரது 20ஆவது ஒருநாள் சதம் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் சார்பில் திரன்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும், ரிம் சௌத்தி, மிச்சல் மக்கிலனகன், கிறான்ட் எலியோட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
போட்டியின் நாயகர்களாக கிறான்ட் எலியோட் மற்றும் லூக் ரொன்சி ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
7 போட்டிகள் கொண்ட தொடரில் 3 இற்கு 1 என்ற ரீதியில் நியூஸிலாந்து அணி முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .