A.P.Mathan / 2015 பெப்ரவரி 16 , மு.ப. 07:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

பதினோராவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை அயர்லாந்து அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றிகொண்டுள்ளது.
இந்தப் பொட்டியில் நணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி, களத்தடுப்பைத் தேர்வுசெய்தது. இதுவரை நடந்துமுடிந்த நான்கு போட்டிகளிலும் முதலாவதாகத் துடுப்பெடுத்தாடிய அணியே வெற்றிபெற்றிருக்கும் நிலையில், அயர்லாந்து அணியின் முடிவு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்த எண்ணத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 304 ஓட்டங்களை எடுத்தது.
முன்வரிசைத் துடுப்பாட்டவீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தாலும் மத்தியவரிசையில் சிமொன்ட்ஸ், டரன் சமி ஆகியோர் ஆடிய அதிரடி ஆட்டம் மேற்கிந்தியத் தீவுகளின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தது. சிமொன்ட்ஸ் 84 பந்துகளில் 102 ஓட்டங்களையும், டரன் சமி 67 பந்துகளில் 89 ஓட்டங்களையும் பெற்றனர். அயர்லாந்து அணியின் ஜோர்ஜ் டொக்ரெல் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
பெரிய இலக்கைத் துரத்திய அயர்லாந்து அணிக்கு போர்ட்டர்ஃபீல்ட், போல் ஸ்ட்ரிலிங் இருவரும் சிறப்பான ஆரம்பத்தைக் கொடுத்தனர். போர்ட்டர்ஃபீல்ட் 23 ஓட்டங்களோடு வெளியேறினாலும், ஸ்ட்ரிலிங்கோடு எட் ஜோய்ஸ் இணைந்துகொள்ள ஓட்ட எண்ணிக்கை விரைவாக அதிகரித்தது. ஸ்ட்ரிலிங் 84 பந்துகளில் 92 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். எட் ஜோய்ஸ் 67 பந்துகளில் 84 ஓட்டங்களை விளாசினார். அடுத்துவந்த நீல் ஓ ப்ரெய்னும் தன் பங்குக்கு 60 பந்துகளில் 79 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காதிருந்து வெற்றியை உறுதிப்படுத்தினார்.
45.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது அயர்லாந்து அணி. மேற்கிந்தியத் தீவுகளின் ஜெரோம் டெய்லர் 71 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். போட்டியின் சிறப்பாட்டக்காரராக போல் ஸ்ட்ரிலிங் தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .