2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

ஐ.சி.சியின் நடவடிக்கை என்னைப் பாதித்தது: அன்டர்சன்

A.P.Mathan   / 2015 ஏப்ரல் 13 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுடனான தொடரில் இந்திய அணி வீரர் ஜடேஜாவுடன் கிரிக்கெட் விதிகளை மீறி முறுகல் தன்மையோடு நடந்துகொண்டதாக இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் அன்டர்சன் மீது புகார் எழுப்பப்பட்டது. அதன் பின்னர் நடைபெற்ற விசாரணைகளைத் தொடர்ந்து ஜேம்ஸ் அன்டர்சன் மீது மட்டுமல்ல ஜடேஜாவின் மீதும் ஐ.சி.சியினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. 

ஐ.சி.சியின் இந்த நடவடிக்கையானது உலகக் கிண்ணத் தொடரில் தனது பந்துவீச்சினைப் பாதித்திருந்ததாக ஜேம்ஸ் அன்டர்சன் தெரிவித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருக்கும் அன்டர்சன், ஊடகங்களுடனான சந்திப்பின்போதே இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

'ஐ.சி.சி யினால் என்மேல் எடுக்கப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கையானது எனது பந்துவீசும் ஆற்றலைப் பாதித்தது. குறித்ததொரு எல்லைக்குள் வீரர்களின் ஆற்றலைக் கட்டுப்படுத்துவதாக அவர்களது ஒழுக்காற்று நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இது எனது இயல்பான ஆற்றலை வெகுவாக சிதைத்தது. வரையறைகளுக்குள் இருந்துகொண்டு எமது ஆற்றலை வெளிக்கொணர்வது மிகக் கடினமான காரியமாகும். எனவே, உலகக் கிண்ணத் தொடரில் என்னால் வழமையான ஆட்டத்தை வெளிப்படுத்த இயலாமல் போயிருந்தது. 

ஷேன் வொட்சனுக்கு எதிரான வஹாப் ரியாஸின் அற்புதமான பந்துவீச்சை இந்த உலகமே கண்டு வியந்தது. அதே நேரம் அந்தப் போட்டியின் பின்னர் அந்த வீரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கைகளும் இந்த உலகத்துக்கு தெரியும். யாரோ உங்களைக் கண்காணித்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணமே தடுமாறவைத்துவிடும். அதனை அனைத்துத் தரப்பினரும் உணரவேண்டும். விளையாட்டினை அதற்குரிய இயல்புத் தன்மையோடு விளையாட அனுமதிக்கவேண்டும். அதுதான் ஆரோக்கியமானது' என்று தனது உள்ளக் கிடக்கையை வெளிக்கொணர்ந்திருக்கும் அன்டர்சன், மேற்கிந்தியத் தீவுகளுடனான தொடரில் அந்தப் பாதிப்புகளிலிருந்து விலகி இயல்பாக விளையாட முடியும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .