2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

தென்னாபிரிக்காவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது பங்களாதேஷ்

A.P.Mathan   / 2015 ஜூலை 16 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் தனது நான்காவது தொடர்ச்சியான ஒருநாள் போட்டித் தொடர் வெற்றியைப் பதிவுசெய்தது பங்களாதேஷ் அணி. 

ஏற்கெனவே நடந்து முடிந்த இரண்டு போட்டிகளில், தலா ஒவ்வொன்றில் ஒவ்வொரு அணியும் வெற்றிபெற்ற நிலையில் சிட்டகொங்கில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் மோதியிருந்தன. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. மழை காரணமாக போட்டி பாதிக்கப்பட்டதால் அணிக்கு தலா 40 ஓவர்களுக்கு போட்டி மட்டுப்படுத்தப்பட்டது.

முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி, ஆரம்பம் முதலே பல சரிவுகளைச் சந்தித்தது. குயின்ரன் டி கொக் 7, டு பிளிஸிஸ் 6, ஹஷிம் அம்லா 15, ரொஸோவு 17 ஓட்டங்களுடன் வெளியேறினர். 50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறிய தென்னாபிரிக்க அணியை டுவிட் மில்லர், டுமினி இணை கொஞ்சம் காப்பாற்றியது. டுமினி 51 ஓட்டங்களையும், டேவிட் மில்லர் 44 ஒட்டங்களையும் எடுத்தனர். 40 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களை மட்டுமே தென்னாபிரிக்காவால் பெறமுடிந்தது. 

அந்தவேளையிலேயே பங்களாதேஷ் அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகிவிட்டது. ஷகிப் அல் ஹஸன் 3 விக்கெட்களையும், முஸ்டபிஷூர் ரஹ்மான், ருபெல் ஹொஸைன் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

169 என்ற வெற்றி இலக்கை விரட்டிய பங்களாதேஷ் அணி, ஆரம்பம் முதலே மிகச் சிறப்பாக விளையாடியது. ஆரம்ப இணையான தமிம் இக்பால், சௌமிய சர்க்கார் இருவருமாக முதல் விக்கெட்டுக்கு 154 ஓட்டங்களைச் சேர்த்தனர். 

75 பந்துகளில் 90 ஓட்டங்களைப் பெற்றிருந்த சௌமிய சர்க்கார் இம்ரான் தாஹிரின் பந்துவீச்சில் அம்லாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். தென்னாபிரிக்காவால் வீழ்த்த முடிந்த ஒரேயொரு விக்கெட் அதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. தமிம் இக்பால் இறுதிவரை ஆடமிழக்காது 61 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க, 26.1 ஓவர்களில் வெற்றி இலங்கை அடைந்து ஒன்பது விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது பங்களாதேஷ் அணி. இந்த வெற்றியின் மூலமாக 3-1 என்ற ரீதியில் தொடரையும் கைப்பற்றிக்கொண்டது. போட்டியின் நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் சௌமிய சர்கார் தெரிவானார். 

சிம்பாப்வேயுடன் 5-0, பாகிஸ்தானுடன் 3-0, இந்தியாவுடனும் தென்னாபிரிக்காவுடனும் 2-1 என்ற கணக்கில் தொடர்ச்சியாக நான்கு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர்களை வென்று கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது பங்களாதேஷ் அணி.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .