.jpg)
இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையில், கொழும்பு - ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற 7ஆவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 87 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து, 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 302 ஓட்டங்களைக் குவித்தது. இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில், 300ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடிய திலகரத்ன டில்ஷான் தனது 18ஆவது சதத்தினைப் பூர்த்தி செய்தார். 1 ஆறு ஓட்டங்கள், 9 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 124 பந்துகளை எதிர்கொண்டு, 101 ஓட்டங்களைப் பெற்றவேளையில் கிரிஸ் ஜோர்டனின் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார். அதிரடியாக துடுப்பெடுத்தாடிய திஸர பெரேரா 26 பந்துகளை மாத்திரம் சந்தித்து 1 ஆறு ஓட்டங்கள், 7 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 54 ஓட்டங்களைப் பெற்றார். டினேஷ் சந்திமால் 55 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். இலங்கையில் தமது இறுதி ஒருநாள் சர்வதேசப் போட்டியில் விளையாடிய மஹேல ஜயவர்த்தன 28 ஓட்டங்களையும் குமார் சங்கக்கார 33 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். ஒருவருடத்தில் முத்தரப்பு போட்டிகளிலும் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றவர் என்ற சாதனையை முறியடிப்பதற்கு இன்னமும் 28 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், குமார் சங்கக்கார ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணி சார்பில் மொயின் அலி, கிறிஸ் ஜோர்டன் ஆகியோல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஹரி குரினி 1 விக்கெட்டினை கைப்பற்றினார்.
303 என்ற இமாலய வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 45.5 ஓவர்களில் 215 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது. இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ஜோய் ரூட் - 80 ஓட்டங்களைப் பெற்றார்.
இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் சார்பில் திலகரத்ன டில்ஷான், சீக்குகே பிரசன்னா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சுரங்க லக்மால் 2 விக்கெட்டுகளையும், டில்ருவன் பெரேரா, மஹேல ஜயவர்த்தன ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இன்றைய போட்டியின் நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் தனது 300ஆவது போட்டியில் விளையாடி 18ஆவது சதத்தினைப் பூர்த்திசெய்த திலகரத்ன டில்ஷான் தெரிவுசெய்யப்பட்டார்.
7 போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் 5 போட்டிகளில் இலங்கை அணி வெற்றிகொண்டதன் மூலம், தொடர் வெற்றியினையும் இலங்கை அணி தனதாக்கிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.