2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

அடுத்த சுற்றில் றியல் மட்ரிட்

Editorial   / 2017 நவம்பர் 29 , பி.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய கோப்பா டெல் ரே தொடரின் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு றியல் மட்ரிட் தகுதிபெற்றுள்ளது. நேற்று  இடம்பெற்ற புயின்லாபிராடா அணியுடான இரண்டாவது சுற்று, இறுதி 32 அணிகளுக்கிடையிலான சுற்றுப் போட்டியின் முடிவில் மொத்தக் கோல்களின் அடிப்படையில் வெற்றிபெற்றே இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு றியல் மட்ரிட் தகுதிபெற்றுள்ளது.

புயின்லாபிராடா அணியுடனான முதலாவது சுற்றுப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற றியல் மட்ரிட், இரண்டாவது சுற்றுப் போட்டியில் தமது இரண்டாம் தர அணியையே களமிறக்கியிருந்தது. கிறிஸ்டியானோ ரொனால்டோ, கரிம் பென்ஸூமா, இஸ்கோ, கஸேமீரோ, மார்ஷெல்லோ, டொனி க்றூஸ், ரபேல் வரானே உள்ளிட்டோர் இப போட்டியில் விளையாடியிருக்கவில்லை. எனினும் கெண்டைக்கால் பின் தசை, தொடைப் பிரச்சினைகளால் கடந்த இரண்டு மாதங்களாக விளையாடியிருக்காத கரித் பேல் இப்போட்டியில் மாற்று வீரராகக் களமிறங்கியிருந்தார்.

போட்டியின் 25ஆவது நிமிடத்தில் லூயிஸ் மில்லா பெற்ற கோல் காரணமாக புயின்லாபிராடா அணி முன்னிலைப் பெற்றது. முதற்பாதி அக்கோலுடன் முடிவடைந்த நிலையில், இரண்டாவது பாதியில் கரித் பேல் களமிறங்கும் வரை றியல் மட்ரிட் கோலெதனையும் பெறவில்லை.

போட்டியின் 62ஆவது நிமிடத்தில் களமிறங்கிய கரித் பேல் பொர்ஜா மயோரலுக்கு கொடுத்த பந்தை அவர் கோலாக்க கோல் எண்ணிக்கையை றியல் மட்ரிட் சமப்படுத்தியதுடன் 70ஆவது நிமிடத்தில் கரித் பேலின் உதையை புயின்லாபிராடா அணியின் கோல் காப்பாளர் தடுத்து வந்த பந்தை பொர்ஜா மயோரல் கோலாக்க றியல் மட்ரிட் முன்னிலை பெற்றது.

எனினும் போட்டியின் 89ஆவது நிமிடத்தில் புயின்லாபிராடா அணியின் மாற்று வீரராகக் களமிறங்கிய அல்வரோ பொர்டில்லா பெற்ற கோலின் காரணமாக இரண்டாவது சுற்றுப் போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைய, 4-2 என்ற மொத்த கோல் கணக்கில் றியல் மட்ரிட் வென்று, இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்குச் சென்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .