2025 ஜூலை 07, திங்கட்கிழமை

அத்லெட்டிகோ மட்ரிட்டை வென்றது பார்சிலோனா

Editorial   / 2019 ஏப்ரல் 07 , பி.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற போட்டியில் அத்லெட்டிகோ மட்ரிட்டை பார்சிலோனா வென்றது.

இப்போட்டியை சிறப்பாக அத்லெட்டிகோ மட்ரிட் ஆரம்பித்தபோதும், போட்டியின் 28ஆவது நிமிடத்தில் தமது முன்கள வீரர் டியகோ கொஸ்டாவுக்கு நேரடியாக சிவப்பு அட்டை காட்டப்பெற்று களத்திலிருந்து வெளியேற்றப்பட்ட, போட்டியின் மிகுதி நேரம் முழுவதும் 10 பேருடன் தடுப்பாட்டத்தையே மேற்கொள்ள வேண்டியிருந்தது.

பார்சிலோனாவின் பின்களவீரர் ஜோர்டி அல்பாவால் தடக்கப்பட்ட டியகோ கொஸ்டா, அது குறித்து மத்தியஸ்தர் நடவடிக்கை எடுக்காத நிலையில் அவரை நோக்கி கோபாவேசமாக செயற்பட்ட நிலையிலேயே சிவப்பு அட்டை காட்டப்பெற்று களத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார். இந்நிலையில், குறித்த போட்டி தொடர்பாக அறிக்கையில், தனது தாய் குறித்து தரக்குறைவாகப் பேசியதாலேயே சிவப்பு அட்டை காண்பித்ததாக மத்தியஸ்தர் குறிப்பிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது கோபத்தைக் கட்டுப்படுத்த டியகோ கொஸ்டா தவறியிருந்தநிலையில், பார்சிலோனாவின் பின்களவீரர் ஜெராட் பிகேயாலேயே குறித்த சம்பவத்தின்போது அவர் களத்திலிருந்து வெளியேற்றப்பட்டதுடன், அவரின் அணித்தலைவரும் பின்களவீரருமான டியகோ கொடின், இன்னொரு சக பின்களவீரர் ஜொஸே கிம்மென்ஸ் ஆகியோர் சிவப்பு அட்டை காண்பித்த தீர்மானத்துக்கு கோபத்தைக் காண்பித்ததால் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், ஜோர்டி அல்பாவின் கோல் கம்பத்தை நோக்கிய உதையொன்று கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்ததுடன், பார்சிலோனாவின் மத்தியகள வீரர் பிலிப் கோச்சினியோ, அணித்தலைவரும் முன்களவீரருமான லியனல் மெஸ்ஸி, இன்னொரு முன்களவீரரான லூயிஸ் சுவாரஸ், மாற்றுவீரராகக் களமிறங்கிய முன்களவீரரான மல்கொம் உள்ளிட்டோரின் கோல் கம்பத்தை நோக்கிய உதைகள் உட்பட மொத்தமாக கோல் கம்பத்தை நோக்கிய எட்டு உதைகளை அத்லெட்டிகோ மட்ரிட்டின் கோல் காப்பாளர் ஜான் ஓப்ளக் அபாரமாகத் தடுத்திருந்தார்.

எனினும், போட்டி முடிவடைய ஐந்து நிமிடங்கள் இருக்கையில் லூயிஸ் சுவாரஸ் பெற்ற கோலுடனும், அதற்கடுத்த நிமிடத்துக்குள் லியனல் மெஸ்ஸி பெற்ற கோலுடனும் இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்றது.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஐபாரை றியல் மட்ரிட் வென்றது. றியல் மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோல்களை கரிம் பென்ஸீமா பெற்றதோடு, ஐபார் சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்க் கார்டோனா பெற்றார்.

அந்தவகையில், இப்போட்டிகளின் முடிவில் லா லிகா புள்ளிகள் தரவரிசையில் 73 புள்ளிகளுடன் முதலிடத்தில் பார்சிலோனாவும், 62 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் அத்லெட்டிகோ மட்ரிட்டும், 60 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் றியல் மட்ரிட்டும் காணப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .