2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

அபுதாபி கிரான்ட் பிறிக்ஸில் வென்றார் போத்தாஸ்

Editorial   / 2017 நவம்பர் 27 , பி.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடப்பு போர்மியுலா வண் பருவகாலத்தின் இறுதி கிரான்ட் பிறிக்ஸான அபுதாபி கிரான்ட் பிறிக்ஸில், சக மெர்சிடிஸ் அணியின் ஐக்கிய இராச்சிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டனை முந்த விடாமல் பார்த்துக் கொண்ட, மெர்சிடிஸ் அணியின் பின்லாந்து ஓட்டுநரான வல்டேரி போத்தாஸ் வெற்றிபெற்றார். அந்தவகையில், இப்பந்தயத்தின் முதலிரண்டு இடங்களையும் மெர்சிடிஸ் அணியே பெற்றது.

இப்பந்தயத்துக்கு இரண்டு பந்தயங்களுக்கு முன்பே தனது நான்காவது உலக சம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றிய லூயிஸ் ஹமில்டன், இப்பந்தயத்தின் பிற்பகுதியில் வேகமானவராக இருந்தபோதும் வல்ட்டேரி போத்தாஸை முந்த முடிந்திருக்கவில்லை.

குறித்த பந்தயத்தில், லூயிஸ் ஹமில்டனை வென்று முதலாமவராக ஆரம்பித்த வல்டேரி போத்தாஸ், பந்தயத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தி வென்றிருந்தார்.

இப்பந்தயத்தை ஆரம்பித்த இடங்களிலேயே பெரும்பாலான ஓட்டுநர்கள் முடித்திருந்த நிலையில், இப்பந்தயதில் மூன்றாமிடத்திலிருந்து ஆரம்பித்த பெராரி அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டல் மூன்றாமிடத்தைப் பெற்றார்.

செபஸ்டியன் வெட்டலை பந்தயத்தில் தொடர்ந்திருந்த அவரின் சக பெராரி அணி வீரரான, பின்லாந்தின் கிமி றைக்கோனன் பந்தயத்தில் நான்காமிடத்தைப் பெற்றார். கிமி றைக்கோனனுக்கு சற்றுப் பின்னர் வந்த றெட் புல் அணியின் மக்ஸ் வெர்ஸ்டப்பன், பந்தயத்தில் ஐந்தாமிடத்தைப் பெற்றார்.

இனி மூன்று மாதங்களுக்கு மேல் உறங்கு நிலைக்கு போர்மியுலா வண் செல்கையில், தங்களது புதிய கார்களில் ஒவ்வொரு அணியும் கவனஞ் செலுத்தும். அவுஸ்திரேலியாவில், அடுத்தாண்டு மார்ச் 26ஆம் திகதியே புதிய பருவகாலம் ஆரம்பிக்கவுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .