2025 ஜூலை 07, திங்கட்கிழமை

இங்கிலாந்து பிறீமியர் லீக்: சம்பியனானது மன்செஸ்டர் சிற்றி

Editorial   / 2019 மே 13 , பி.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான பிறீமியர் லீக் தொடரில், நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி, தமது சம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டது.

பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனின் மைதானத்தில் நேற்று  இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் பின்தங்கியிருந்து வந்து வென்றதன் மூலமே நடப்பு இங்கிலாந்து பிறீமியர் லீக் பருவகாலத்தில் மன்செஸ்டர் சிற்றி சம்பியனாகியது.

இப்போட்டியின் 27ஆவது நிமிடத்தில், மூலையுதையொன்றை தலையால் முட்டிக் கோலாக்கிய பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனின் முன்களவீரர் கிளன் மரே தனதணிக்கு முன்னிலையை வழங்கினார். எனினும், அடுத்த நிமிடத்தில் தமது முன்களவீரர் சேர்ஜியோ அகுரோ பெற்ற கோலின் மூலம் கோலெண்ணிக்கையைச் சமப்படுத்திய மன்செஸ்டர் சிற்றி, அதற்கடுத்த 10ஆவது நிமிடத்தில் தமது பின்களவீரர் அய்மரிக் லபோர்ட்டே பெற்ற கோலின் மூலம் முன்னிலை பெற்றது.

பின்னர், போட்டியின் 63ஆவது நிமிடத்தில் தமது இன்னொரு முன்களவீரரான றியாட் மஹ்ரேஸ் பெற்ற கோலின் மூலம் 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்ற மன்செஸ்டர் சிற்றி, 72ஆவது நிமிடத்தில் பிறீ கிக்கொன்றின் மூலம் இல்கி குன்டோகன் பெற்ற அபாரமான கோலோடு இறுதியில் 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

இந்நிலையில், தமது மைதானத்தில் நேற்று  இடம்பெற்ற வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸுடனான போட்டியில், சாடியோ மனே பெற்ற இரண்டு கோல்களோடு 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற லிவர்பூல், மன்செஸ்டர் சிற்றி பெற்ற 98 புள்ளிகளை விட ஒரு புள்ளி குறைவாக 97 புள்ளிகளைப் பெற்று இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்டது.

இதேவேளை, மன்செஸ்டர் சிற்றி, லிவர்பூலுக்கு அடுத்ததாக, அடுத்த பருவகாலத்துக்கான சம்பியன்ஸ் லீக் தொடருக்கு செல்சி, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தகுதிபெற்றன. இதில், லெய்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில் நேற்று நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் செல்சி சமநிலையில் முடித்துக் கொண்டதுடன், தமது மைதானத்தில் நேற்று  நடைபெற்ற எவெர்ற்றனுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் சமப்படுத்தியது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சார்பாக, எரிக் டயர், கிறிஸ்டியன் எரிக்சன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, எவெர்ற்றன் சார்பாக தியோ வொல்கொட், சென்க் டொசுன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, பேர்ண்லியின் மைதானத்தில் நேற்று  நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது. ஆர்சனல் சார்பாக, பியரி-எம்ரிக் அபுமெயாங்க் இரண்டு கோல்களையும், எடி கெய்ட்டா ஒரு கோலையும் பெற்றட்தோடு, பேர்ண்லி சார்பாகப் பெறப்பட்ட கோலை அஷ்லி பார்ண்ஸ் பெற்றிருந்தார்.

இந்நிலையில், தமது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற கார்டிஃப் சிற்றியுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் தோல்வியடைந்திருந்தது.

அந்தவகையில், இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியல் பின்வருமாறு,

  1. மன்செஸ்டர் சிற்றி 98 புள்ளிகள்
  2. லிவர்பூல் 97 புள்ளிகள்
  3. செல்சி 72 புள்ளிகள்
  4. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் 71 புள்ளிகள்
  5. ஆர்சனல் 70 புள்ளிகள்
  6. மன்செஸ்டர் யுனைட்டெட் 66 புள்ளிகள்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .