Shanmugan Murugavel / 2015 நவம்பர் 16 , மு.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை விரும்பியது போன்று இந்தியாவில் வைத்து, பாகிஸ்தான் தொடரை விளையாடாது என பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் ஷகாரியார் கான் மீள வலியுயுறுத்தினார்.
அடுத்த மாதம் இந்தியாவில் வைத்து பாகிஸ்தான் தொடரை நடாத்துவதற்கான சந்தர்ப்பமொன்றை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் ஷஷாங் மனோகர் வழங்கியிருந்த நிலையில், இந்தியா, தொடரை விளையாட்டுவதற்கு ஐக்கிய அரபு எமீரகத்துக்கு வந்தால் மட்டுமே தொடர் இடம்பெறுவது சாத்தியம் என்று ஷகாரியார் கான் மீள வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய அரபு எமீரகத்தில் இந்தியா, பாகிஸ்தானுடன் விளையாடுவதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி வழங்காது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் அனுராக் தாகூர் தெரிவித்திருந்த நிலையில், 2014ஆம் ஆண்டு இந்தியன் பிறிமியர் லீக் ஐக்கிய அரபு எமீரகத்தில் இடம்பெற்றிருந்த நிலையில் ஏன் அங்கு தற்போது தொடரொன்றை விளையாட முடியாது என்பதற்கு காரணம் தெரிய வேண்டும் என ஷகாரியார் கான் கூறியுள்ளார்.
நாங்கள் 2007,2012 இல் இந்தியாவுக்குச் சென்றதாகவும், இந்தத் தடவை மீண்டும் செல்ல மாட்டோம் என்றும் இது எங்களுடைய தொடர் என்றும், நாங்கள் எங்களுடைய சொந்த மைதானமான ஐக்கிய அரபு எமீரகத்திலேயே விளையாடுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
2014ஆம் ஆண்டு இரு நாடுகளிடையே கைச்சாத்தான ஒப்பந்தத்தின் படி, இரண்டு டெஸ்ட்கள், ஐந்து சர்வதேச ஒருநாள் போட்டிகள், இரண்டு இருபது-20 போட்டிகளை பாகிஸ்தான் நடாத்த வேண்டும். எனினும் ஜனவரி மாதம் 12ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஜனவரி 8ஆம் திகதி இந்தியாவானது அவுஸ்திரேலியாவுக்கு பயணமாகவுள்ள நிலையில் ஒரு மாத இடைவெளியே காணப்பட்டுள்ளது. இந்நிலையில், வருமானம் சமமாகவே உள்ள நிலையில், டெஸ்ட் போட்டிகளை கைவிட்டுவிட்டு 50 ஓவர், 20 ஓவர் தொடரை நடாத்த பாகிஸ்தான் தயாராகவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தவிர, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் உத்தியோகபூர்வ முன்மொழிவை எதிர்பார்த்துள்ள நிலையில், இது தொடர்பான முடிவு, பாகிஸ்தான் அரசாங்கத்தாலேயே எடுக்கப்படும் என ஷகாரியார் கான் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஒளிபரப்பு உரிமைகளை டென் ஸ்போர்ட்ஸும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் உரிமைகளை ஸ்டார் இந்தியாவும் கொண்டிருக்கும் நிலையில், பாகிஸ்தான், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பட்சத்தில் யாருக்கு தொலைகாட்சி உரிமை என்றும் சிக்கல் நிலவுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .