2025 ஜூலை 14, திங்கட்கிழமை

இறுதிப் போட்டியில் செல்சி

Editorial   / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான, விலகல் முறையிலான இங்கிலாந்து கால்பந்தாட்ட சங்க சவால் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி தகுதிபெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், இன்னொரு பிறீமியர் லீக் கழகமான செளதாம்டனை வென்றே இறுதிப் போட்டிக்கு செல்சி தகுதி பெற்றுள்ளது.

இப்போட்டியின் முதற்பாதியில் கோலெதுவும் பெறப்பட்டிருக்காத நிலையில், இரண்டாவது பாதியின் முதலாவது நிமிடத்திலேயே செல்சியின் நட்சத்திர மத்தியகள வீரர் ஈடின் ஹஸார்ட்டிடமிருந்து பெற்ற பந்தை செளதாம்டனின் இரண்டு வீரர்களைத் தாண்டி ஒலிவர் ஜிரோட் பெற்ற கோல் காரணமாக செல்சி முன்னிலை பெற்றது.

பின்னர், போட்டி முடிவடைவதற்கு 10 நிமிடங்கள் இருக்கையில், ஒலிவர் ஜிரோட்டைப் பிரதியீடு செய்த அல்வரோ மொராட்டா, தான் களமிறங்கிய இரண்டாவது நிமிடத்தில், சக வீரர் சீஸர் அத்பிலிகெட்டாவிடமிருந்து வந்த உதையை தலையால் முட்டி கோலாக்கியதோடு 2-0 என்ற கோல் கணக்கில் இறுதியில் வென்ற செல்சி, இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுக் கொண்டது.

பெறப்பட்ட இந்த இரண்டு கோல்கள் தவிர, செல்சியின் அதிவேகமான தாக்குதல் நகர்வொன்றில் வில்லியனின் உதை கோல் கம்பத்தில் பட்டுத்தி திரும்பியிருந்ததுடன், ஈடின் ஹஸார்ட்டின் உதையொன்றை, கோல் கம்பத்துக்கு மேலால் தட்டி விட்டிருந்தார். இதேவேளை, போட்டியின் இறுதி நேரத்தில் வேறு இரண்டு கோல் பெறும் வாய்ப்புகளை அல்வரோ மொராட்டா கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மறுபக்கம் செளதாம்டன் அணியின் நாதன் றெட்மொன்ட் கோல் கம்பத்திலிருந்து நீண்ட தூரத்திலிருந்து உதைந்த உதையொன்றின் மூலம் கோல் பெறுவதை நெருங்கியிருந்ததுடன், சார்லி ஒஸ்டினின் உதையொன்று கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்தது.

அந்தவகையில், கடந்தாண்டு இங்கிலாந்து கால்பந்தாட்ட சவால் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் ஆர்சனலிடம் தோல்வியடைந்த செல்சி, இம்முறை இறுதிப் போட்டியில் மன்செஸ்டர் யுனைட்டெட்டை எதிர்கொள்ளவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .