2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இலங்கை எதிர் இந்தியா: 2ஆவது டெஸ்ட் நாளை

Editorial   / 2017 நவம்பர் 23 , பி.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் நாக்பூரில் நாளை காலை மணிக்கு ஆரம்பமாகின்றது.

கொல்கத்தாவில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில், மழை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஏறத்தாழ 180 ஓவர்கள் வரை இழக்கப்பட்டபோதும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில், போட்டியின் இறுதி நாளில் மயிரிழையிலேயே முடிவு பெறப்பட முடியாமல் போயிருந்தது.

தென்னாபிரிக்காவுக்கான சுற்றுப் பயணத்துக்கு தயாரகும் பொருட்டு, இத்தொடருக்கான ஆடுகளங்கள் அனைத்தும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானதாகவே காணப்படுமென்று தெரிவிக்கப்படுகின்ற நிலையில் இந்தப் போட்டியும் துடுப்பாட்ட வீரர்களுக்கு கடினமானதாகவே அமையப் போகின்றது.

முதலாவது போட்டியில் போட்டியின் நான்கு நாட்களிலும் முன்னிலை பெற்றிருந்த இலங்கை கடைசி நாளில் தோல்வியைத் தவிர்க்க போராட வேண்டியிருந்ததால் இலங்கையணியின் நம்பிக்கை சிறிதளவு தளர்ந்திருந்தாலும் இப்போட்டியிலும் இலங்கை அணி போராட்டத்தை வெளிப்படுத்துமென்பதில் அச்சமில்லை.

முதலாவது போட்டியில் விளையாடிய அதேயணியே இலங்கை சார்பாக இப்போட்டியில் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், சந்தேகிக்கப்பட்ட லஹிரு திரிமான்ன கடந்த போட்டியில் ஓட்டங்களைப் பெற்றிருந்தார். எவ்வாறெனினும் வேகப்பந்துவீச்சுக்கு ஆடுகளம் ஒத்துழைக்கும் என தீர்மானித்தால், டில்ருவான் பெரேராவுக்குப் பதிலாக பந்துவீசக் கூடிய துடுப்பாட்ட வீரர் றொஷேன் சில்வா அல்லது வேகப்பந்துவீச்சாளர் விஷ்வ பெர்ணான்டோ களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கம் திருமணம் காரணமாக, முதலாவது போட்டியின் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியின் நாயகனாகத் தெரிவான வேகப்பந்துவீச்சாளர் புவ்னேஷ்வர் குமார் மீதமுள்ள இத்தொடரைத் தவறவிடுகின்றமை இலங்கை அணிக்கு நிம்மதியைத் தரலாம். புவ்னேஷ்வர் குமாருக்குப் பதிலாக இஷாந்த் ஷர்மா அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, தனிப்பட்ட காரணங்களுக்காக இப்போட்டியிலிருந்து விலகியுள்ள ஷீகர் தவானுக்குப் பதிலாக முரளி விஜய் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கலாம். இதுதவிர, வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானதாக ஆடுகளம் காணப்படுமிடத்து, இரவிச்சந்திரன் அஷ்வின் அல்லது இரவீந்திர ஜடேஜாவுக்குப் பதிலாக மேலதிகத் துடுப்பாட்ட வீரராக ரோஹித் ஷர்மா அணியில் இடம்பெறக்கூடிய வாய்ப்புகளும் காணப்படுகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .