2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இலங்கையணித் தலைவராக திஸர பெரேரா

Editorial   / 2017 நவம்பர் 29 , பி.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அணிக்கெதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான இலங்கை அணியின் தலைவராக, இலங்கையணியின் சிரேஷ்ட சகலதுறை வீரரான திஸர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்தவகையில், இந்திய அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்குமான இலங்கையணிக்கு திஸர பெரேரா தலைமை தாங்குகிறார்.

இலங்கையணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான தலைவராகவிருந்த, சிரேஷ்ட ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க, பாகிஸ்தானில் அண்மையில் இடம்பெற்ற இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் விளையாட மறுத்ததையடுத்து, பாகிஸ்தானுக்கெதிராக, ஐக்கிய அரபு அமீரகத்திலும் பாகிஸ்தானிலும் இடம்பெற்ற இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் திஸர பெரேரா தலைமை தாங்கியிருந்தார்.

இந்நிலையிலேயே, உபுல் தரங்கவின் கீழ், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், 5-0 என மூன்று தடவைகள் இலங்கை வெள்ளையடிக்கப்பட்ட நிலையிலேயே, 28 வயதான திஸர பெரேரா இலங்கையணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாண்டு ஜூலையில், இலங்கையணின் தலைவர் பதவியிலிருந்து அஞ்சலோ மத்தியூஸ் விலகியதன் பின்னர், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான அணியின் தலைவராக உபுல் தரங்கவும் டெஸ்ட் போட்டிகளுக்கான தலைவராக தினேஷ் சந்திமாலும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைமையை அஞ்சலோ மத்தியூஸுக்கு மீண்டும் வழங்குவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்றபோதும் தொடர்ச்சியாக காயங்களால் பாதிக்கப்படுவதால் அவருக்கு அணித்தலைமை வழங்கப்படவில்லை. இது தவிர, தினேஷ் சந்திமாலின் பெயரும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுகான அணித்தலைமைக்காக கலந்துரையாடப்பட்டபோதும் அண்மைய ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் சொல்லிக் கொள்ளும்படியாக தினேஷ் சந்திமால் பிரகாசிக்காமை காரணமாக அவரும் தேர்வாகவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .