2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

உலகக் கிண்ணம்: பயிற்றுவிப்பாளர் குழாமில் பங்கெடுக்கும் வாய்ப்பை நிராகரித்த மகேல

Editorial   / 2019 மே 26 , பி.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரின்போது இலங்கையின் பயிற்றுவிப்பாளர் குழாமில் பங்கெடுக்கும் வாய்ப்பை, கிரிக்கெட் அரசியல் காரணமாக நிராகரித்ததாக இலங்கையணியின் முன்னாள் தலைவர் மகேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கையின் பயிற்றுவிப்பாளர் குழாமில் பங்கெடுக்குமாறு ஒரு தடவை இலங்கையின் விளையாட்டமைச்சர் ஹரின் பெர்ணான்டோவாலும், ஒரு தடவை இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்றதிகாரி அஷ்லி டி சில்வாவாலும் வினவப்பட்டதாக மகேல ஜெயவர்தன கூறியுள்ளார்.

தான் இரண்டு தடவைகள் அழைக்கப்பட்டதாகவும், ஆனால் தனக்கு வேறு சில கடப்பாடுகள் இருந்ததாகவும், அதற்கு மேலதிகமாக தான் ஆற்ற வேண்டியதென எதிர்பார்க்கப்படும் வகிபாகத்தை புரிந்துகொள்ள முடியவில்லை எனத் தெரிவித்த மகேல ஜெயவர்தன, முழு அமைப்பிலும் தான் கருத்துக் கூற முடியாவிட்டால் தந்திரோபாய ரீதியாகவோ அல்லது எவ்வாறோ தான் பங்கெடுப்பதில் அர்த்தமில்லை எனக் கூறியுள்ளார்.

இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட் அமைப்பை மாற்றுவதற்குரிய திட்டங்களை மகேல ஜெயவர்தன முன்னைய காலங்களில் தயாரித்தபோதும், அந்த முன்மொழிவுகள் இலங்கை கிரிக்கெட் சபையால் நிராகரிக்கப்பட்டிருந்தன. கடந்தாண்டும், மகேல ஜெயவர்தன, குமார் சங்கக்கார, அரவிந்த டி சில்வா ஆகியோரை உள்ளடக்கிய செயற்குழுவொன்று நிர்வகிப்பு, உள்ளூர்க் கட்டமைப்பு தொடர்பான பரிந்துரைகளுடன் இலங்கையின் கிரிக்கெட் பற்றி அறிக்கையொன்றை தயாரித்தபோதும் அந்தப் பரிந்துரைகள் ஏறத்தாழ முழுமையாக நிராகரிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமாலின் தலைமைத்துவங்களை கடுமையாக விமர்சித்த மகேல ஜெயவர்த்தன கிரிக்கெட் அரசியலுக்குள் சென்றதாகக் கூறியதுடன், லசித் மலிங்கவிடமிருந்து அணித்தலைமைப் பதவி பறிக்கப்பட்டமை குறித்தும் தனது விமர்சனங்களை வெளிப்படுத்தியிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .