2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

ஐ.அமெரிக்க பகிரங்க டென்னிஸ்: ஷரபோவா அதிரடி

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர், இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை ஆரம்பித்தது. போட்டியின் முதல் நாளிலேயே, பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2ஆம் நிலை வீராங்கனையான றோமானியாவின் சிமோனா ஹலெப் உள்ளிட்ட சிலர், தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

சுமார் 2 ஆண்டுகாலப் பகுதியில், தனது முதலாவது கிரான்ட் ஸ்லாம் போட்டியில் விளையாடிய ஷரபோவா, உலகின் 2ஆம் நிலை வீராங்கனையான சிமோனா ஹலெப்பை எதிர்கொண்டார்.

இதில், முதலாவது செட்டை 6-4 என்ற புள்ளிகள் கணக்கில், ஷரபோவா கைப்பற்றினார். ஆனால், அடுத்த செட்டில் பதிலடி வழங்கிய ஹலெப், 6-4 என்ற புள்ளிகள் கணக்கில், அதைக் கைப்பற்றினார். போட்டியின் முடிவைத் தீர்மானிக்கும் 3ஆவது செட்டில், சிறப்பாக விளையாடிய ஷரபோவா, 6-3 என்ற புள்ளிகள் கணக்கில் போட்டியை வென்று, போட்டியிலும் வெற்றிபெற்றார்.

இன்னோர் அதிர்ச்சி, பெரிய பிரித்தானியாவுக்குக் காத்திருந்தது. அந்நாட்டின் முதல்நிலை வீராங்கனையும் உலகின் 7ஆம் நிலை வீராங்கனையுமான ஜொஹன்னா கொன்டா, 78ஆம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் அலெக்ஸான்ட்ரா குருனிக்கை எதிர்கொண்டார்.

முதலாவது செட்டை 6-4 என்ற புள்ளிகள் கணக்கில், கொன்டா கைப்பற்றிய போதிலும், அடுத்த 2 செட்களிலும் பதிலடி வழங்கிய குருனிக், 6-3, 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று, போட்டியை வெற்றிகொண்டார்.
பெண்களில் 3ஆம் நிலை வீராங்கனையான ஸ்பெய்னின் கார்பைன் முகுருஸா, 5ஆம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வொஸ்னியாக்கி, 9ஆம் நிலை வீராங்கனையான ஐ.அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், 13ஆம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெட்ரா குவிற்றோவா ஆகியோர், வெற்றிபெற்றனர்.

ஆண்களில் 4ஆம் நிலை வீரரான ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸவெரெவ், 5ஆம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச், 10ஆம் நிலை வீரரான ஐ.அமெரிக்காவின் ஜோன் இஸ்னர் ஆகியோர் வெற்றிபெற்று, அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றனர்.

‘இந்தப் பெண் எங்கும் செல்லப்போவதில்லை’

தடைசெய்யப்பட்ட மருந்தைப் பயன்படுத்திய பின்னர், மீண்டும் கிரான்ட் ஸ்லாம் போட்டியில் பங்குபற்றிய மரியா ஷரபோவா, அந்தப் போட்டியில் வெற்றிபெற்ற பின்னர், உணர்வுபூர்வமான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.

2006ஆம் ஆண்டில், ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரை வெற்றிகொண்ட போது, கறுப்பு நிற ஆடையை அணிந்தே, ஷரபோவா விளையாடியிருந்தார். இம்முறை தொடரிலும், கறுப்பு நிற ஆடையுடனேயே அவர் களமிறங்கியுள்ளார்.

“இந்தக் கறுப்பு ஆடைகளுக்கும் பளிங்குகளுக்கும் பின்னால், மனஉறுதி மிக்க பெண்ணொருத்தி இருக்கிறாள். அவள், எங்கேயும் போய்விடப் போவதில்லை” என்று தெரிவித்தார்.

நீண்ட நாட்களின் பின்னர், தனது முதலாவது கிரான்ட் ஸ்லாம் போட்டியில் பங்குபற்றியமை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், “இது, இன்னொரு நாள், இன்னொரு சந்தர்ப்பமென நீங்கள் எண்ண முயல்வீர்கள். ஆனால், அதைவிட இது அதிகமானது” என்று குறிப்பிட்டார்.

போட்டியை வென்ற பின்னர், முழங்காலில் சென்று, அழுதிருந்த ஷரபோவா, “போட்டியின் இறுதிப் புள்ளி வரை, [போட்டியை வென்றால்] எவ்வாறு உணர்வீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. ஆனால் இறுதியில், அது பொருத்தமான உணர்வாக இருக்கும்” என்று தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .