2024 மே 05, ஞாயிற்றுக்கிழமை

ஐ.பி.எல்: குஜராத்தை வென்ற டெல்லி

Shanmugan Murugavel   / 2024 ஏப்ரல் 25 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), டெல்லியில் நேற்று இரவு நடைபெற்ற குஜராத் டைட்டான்ஸ் உடனான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் வென்றது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற குஜராத்தின் அணித்தலைவர் ஷுப்மன் கில், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார்.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி, சந்தீப் வரியரிடம் ஜேக் பிறேஸர்-மக்குர்க், பிறித்திவி ஷோ, ஷே ஹோப்பை பறிகொடுத்தது. எனினும் அதன் பின்னர் ஜோடி சேர்ந்த அணித்தலைவர் றிஷப் பண்டின் ஆட்டமிழக்காத 88 (43), அக்ஸர் பட்டேலின் 66 (43) மற்றும் ட்ரிஸ்டான் ஸ்டப்ஸின் ஆட்டமிழக்காத 26 (07) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 224 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு 225 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய குஜராத், கில்லை ஆரம்பத்திலேயே அன்றிச் நொர்கியாவிடம் இழந்தது. பின்னர் ரித்திமான் சஹாவும், வொரியருக்குப் பதிலாக தாக்கம் செலுத்தும் மாற்றுவீரராகக் களமிறங்கிய சாய் சுதர்ஷன் மூலம் வேகமாக ஓட்டங்களைப் பெற்றது.

இந்நிலையில் சஹா 39 (25) ஓட்டங்களுடன் குல்தீப் யாதவ்விடம் விழுந்ததோடு, அடுத்து வந்த அஸ்மதுல்லாஹ் ஓமர்ஸாய் உடனடியாக அக்ஸர் பட்டேலிடம் வீழ்ந்தார். குறிப்பிட்ட இடைவெளிகளில் 65 (39) ஓட்டங்களைப் பெற்ற சுதர்ஷன், ஷாருக் கான் ஆகியோர் ஷோவுக்குப் பதிலாக மாற்றுவீரராகக் களமிறங்கிய ரசிக் சலாமிடம் வீழ்ந்ததோடு, ராகுல் டெவாட்டியா குல்தீப்பிடம் வீழ்ந்தார்.

இதையடுத்து அதிரடியாக 55 (23) ஓட்டங்களை டேவிட் மில்லர் பெற்றபோதும் அவர் முகேஷ் குமாரிடம் வீழ்ந்தார். இறுதி ஓவர்களில் 13 (06) ஓட்டங்களைப் பெற்ற கிஷோர் சலாமிடம் வீழ்ந்ததோடு, ரஷீட் கான் ஆட்டமிழக்காமல் 21 (11) ஓட்டங்களைப் பெற்ற நிலையில் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 220 ஓட்டங்களைப் பெற்ற குஜராத் நான்கு ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக பண்ட் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .