2025 ஜூலை 17, வியாழக்கிழமை

“கோலியின் வீடியோ அழைப்பால் விபரீதம்”

Editorial   / 2025 ஜூலை 17 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஜூன் 4 அன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு, ஆர்சிபி அணி நிர்வாகத்தை கர்நாடக அரசு குற்றம்சாட்டியுள்ளது. மேலும், விராட் கோலியின் வீடியோ அழைப்பு இந்த அசம்பாவிதத்துக்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கடந்த ஜூன் 4 அன்று ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 ரசிகர்கள் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது.

இந்தச் சூழலில், கூட்டநெரிசல் உயிரிழப்புகளுக்கு ஆர்சிபி அணி நிர்வாகம் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் தவறுகளே காரணம் என்பதை சுட்டிக்காட்டி கர்நாடக அரசு தனது அறிக்கையை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையில், ‘நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க்ஸ் பிரைவேட் லிமிடெட், ஆர்சிபியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தது. ஆனால் அத்தகைய நிகழ்வுக்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது

இருந்தபோதிலும், ஜூன் 4 அன்று நடைபெற்ற அந்த நிகழ்வில் கலந்து கொள்ள ரசிகர்களுக்கு சமூக ஊடகங்களில் விராட் கோலி வீடியோ மூலம் அழைப்பு விடுத்தார். முதலில் அந்த நிகழ்ச்சிக்கு இலவச அனுமதி எனவும் விளம்பரம் செய்யப்பட்டது. விராட் கோலி வெளியிட்ட வீடியோ அழைப்பால் பெரியளவில் ரசிகர்கள் திரண்டதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

ஜூன் 4 அன்று கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் குழப்பம் தீவிரமடைந்தது. இதனால் பிற்பகல் 3.14 மணியளவில், சின்னசாமி மைதானத்திற்குள் நுழைய ‘பாஸ்’கள் அவசியம் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர். நிர்வாகத்தின் இந்த கடைசி நிமிட அறிவிப்பு ரசிகர்களிடையே பீதியை ஏற்படுத்தியது. நுழைவு வாயில்களில் மோசமான திட்டமிடல் மற்றும் வாயில்களை திறப்பதில் நடந்த தாமதம் காரணமாக கூட்டநெரிசல் ஏற்பட்டது. ஆர்சிபி, டிஎன்ஏ மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் இடையே முறையான ஒருங்கிணைப்பு இல்லாததால் இந்த அசம்பாவிதம் நடந்தது’ என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நடந்த பின்னர், எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, மாஜிஸ்திரேட் மற்றும் நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதாகவும், முதலமைச்சரின் அரசியல் செயலாளர் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும், மாநில உளவுத்துறைத் தலைவர் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. (நன்றி: த ஹிந்து  தமிழ்)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X