2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

‘களத்தடுப்பில் பாடசாலைச் சிறுவர்கள் போலச் செயற்பட்டோம்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 03 , மு.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டியிலும் இலங்கை அணி தோல்வியடைந்துள்ள நிலையில், இலங்கை அணியின் களத்தடுப்பு மீது முக்கியமான விமர்சனத்தை முன்வைத்த அணித் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், “களத்தடுப்பு என்று வரும் போது, பாடசாலைச் சிறுவர்கள் போன்று நாங்கள் காணப்பட்டோம்” என்று குறிப்பிட்டார்.

5 போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்திருந்த நிலையில், தம்புள்ளையில் நேற்று முன்தினம் (01) இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் வெற்றிபெறும் எண்ணத்தோடு இலங்கை அணி களமிறங்கியது. ஆனால், அப்போட்டியிலும் தோல்வியடைந்து, தென்னாபிரிக்க அணிக்கெதிராக, தொடர்ச்சியாக 10ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டித் தோல்வியை, இலங்கை பெற்றுக் கொண்டது.

ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், மத்திய ஓவர்களில் ஓரளவுக்குச் சிறப்பாக விளையாடிய இலங்கை, பின்னர் இறுதிநேர ஓவர்களில் மோசமாகத் துடுப்பெடுத்தாட, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 244 ஓட்டங்களையே பெற்றது.

ஆரம்பத்தில் இழக்கப்பட்ட விக்கெட்டுகளைக் குறிப்பிட்டுப் பேசிய மத்தியூஸ், அதன் பின்னர், விட்டதைப் பிடிக்கும் வகையிலேயே, இலங்கையின் துடுப்பாட்டம் அமைந்தது எனவும், எப்போது, சீரான ஓட்டக் குவிப்பை இலங்கை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.

பந்துவீச்சாளர்களை நியாயப்படுத்திய அவர், அவர்கள் ஓரளவு சிறப்பாகச் செயற்பட்டனர் எனவும் தெரிவித்தார். “துரதிர்ஷ்டவசமாக, இவ்வாறான இலக்கொன்றைத் தடுக்க முயலும் போது, நாங்கள் பிடிக்க வேண்டிய அளவுக்கு, நாங்கள் பிடிகளைப் பிடித்திருக்கவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

இலங்கை சார்பாக, ஆரம்பத்திலேயே பிடிகள் தவறவிடப்பட்டிருந்தன. 4ஆவது ஓவரில் அம்லாவின் பிடியை, குசல் பெரேரா தவறவிட்டிருந்தார். பின்னர், 6ஆவது ஓவரில், குயின்டன் டீ கொக்கின் பிடியை, அகில தனஞ்சய தவறவிட்டிருந்தார். அதே ஓவரில், டீ கொக் அடித்த பந்து, பந்துவீச்சாளர் கசுன் ராஜிதவிடம் வேகமாகச் சென்றது. கடினமான வாய்ப்பாக அது காணப்பட்ட போதிலும், அவ்வாய்ப்பையும் அவர் தவறவிட்டிருந்தார்.

இத்தொடரில் 2 தோல்விகளைப் பெற்றுள்ள இலங்கை, இனிமேல் தொடரை வெல்வதாயின், அடுத்த 3 போட்டிகளையும் வெற்றிகொள்ள வேண்டியுள்ள நிலையில், இப்போட்டியில் விடப்பட்ட தவறுகளை விடுத்து, முன்னோக்கிச் செல்ல வேண்டுமென, மத்தியூஸ் கோரினார்.

ஸ்கோர் விவரம்

நாணயச் சுழற்சி: இலங்கை

இலங்கை: 244/8 (50 ஓவ.) (துடுப்பாட்டம்: அஞ்சலோ மத்தியூஸ் ஆ.இ 79 (111), நிரோஷன் டிக்வெல்ல 69 (78) ஓட்டங்கள். பந்துவீச்சு: அன்டிலே ஃபெக்லுவாயோ 9-0-45-3, லுங்கி இங்கிடி 8-1-50-3)

தென்னாபிரிக்கா: 246/6 (50 ஓவ.) (துடுப்பாட்டம்: குயின்டன் டீ கொக் 87 (78), ஃபப் டு பிளெஸி 49 (41), ஹஷிம் அம்லா 43 (43)ஓட்டங்கள். பந்துவீச்சு: அகில தனஞ்சய 10-0-60-3)

போட்டியின் நாயகன்: குயின்டன் டீ கொக்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X