2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கோப்பா அமெரிக்கா தொடர்: ஆர்ஜென்டீனாவை வென்று இறுதிப் போட்டியில் பிரேஸில்

Editorial   / 2019 ஜூலை 03 , பி.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்நாட்டில் இடம்பெற்றுவரும் தென்னமரிக்க கால்பந்தாட்ட சம்மேளன தேசிய அணிகளுக்கிடையிலான 46ஆவது கோப்பா அமெரிக்கா தொடரின் இறுதிப் போட்டிக்கு பிரேஸில் தகுதிபெற்றுள்ளது.

பெலோ ஹொரிஸொன்டேயில் இன்று காலை இடம்பெற்ற ஆர்ஜென்டீனாவுடனான அரையிறுதிப் போட்டியில் வென்றமையத் தொடர்ந்தே இறுதிப் போட்டிக்கு பிரேஸில் தகுதிபெற்றிருந்தது.

இப்போட்டியின் முதலாவது கோல் பெறும் வாய்ப்பாக ஆர்ஜென்டீனாவுக்கு அதன் மத்தியகளவீரரான லியனார்டோ பரெடெஸ் கோல் கம்பத்திலிருந்து 30 அடி தூரத்திலிருந்து உதையொன்றை உதைந்திருந்தபோதும் அது கோல் கம்பத்துக்கு மேலால் சென்றிருந்தது.

இந்நிலையில், போட்டியின் 19ஆவது நிமிடத்தில், மூன்று வீரர்களைத் தாண்டி சக முன்களவீரரான றொபேர்ட்டோ ஃபெர்மினோவிடம் பிரேஸிலின் அணித்தலைவரும் பின்களவீரருமான டனி அல்விஸ் கொடுத்த பந்தை அவர் தனது சக முன்களவீரரான கப்ரியல் ஜெஸூஸிடம் வழங்க அவர் அதைக் கோலாக்க ஆரம்பத்திலேயே பிரேஸில் முன்னிலை பெற்றது.

தொடர்ந்த போட்டியின் 30ஆவது நிமிடத்தில், சக முன்களவீரரான லியனல் மெஸ்ஸியின் பிறீ கிக்கை ஆர்ஜென்டீனாவின் முன்களவீரரான சேர்ஜியோ அகுரோ தலையால் முட்ட அது கோல் கம்பத்தில் பட்டு, கோல் எல்லைக்கு சற்று முன்னால் வீழ்ந்திருந்த நிலையில், அப்பந்தை அவ்விடத்திலிருந்து பிரேஸில் அகற்றியிருந்தது.

இதைத் தொடர்ந்து, லியனல் மெஸ்ஸியிடமிருந்து பெற்ற பந்தை, பிரேஸிலின் பின்களவீரரான தியாகோ சில்வா வீழ்ந்ததைப் பயன்படுத்தி கோல் கம்பத்தை நோக்கி உதைய சேர்ஜியோ அகுரோ முற்பட்டபோதும், குறித்த உதையை பிரேஸிலின் இன்னொரு பின்களவீரரான மார்குயின்ஹொஸ் தடுத்திருந்தார். இதையடுத்து, இரண்டு வீரர்களைத் தாண்டி லியனல் மெஸ்ஸி பந்தைக் கொண்டு சென்றபோதும், அவரின் கோல் கம்பத்தை நோக்கிய உதையானது கோல் கம்பத்துக்கு வெளியே உயரமாக சென்றிருந்தது.

மறுபக்கமாக, பிரேஸிலின் மத்தியகளவீரரான ஆர்தர் மெலோ கோல் கம்பத்தை நோக்கிய பலமான உதையானது நேரேயே ஆர்ஜென்டீனாவின் கோல் காப்பாளர் ஃபிராங்கோ அர்மனியிடம் சென்றிருந்த நிலையில் முதற்பாதி முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரேஸில் முன்னிலை வகித்தது.

இந்நிலையில், இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் சக முன்களவீரரான லோட்டாரோ மார்ட்டின்ஸை நோக்கி சேர்ஜியோ அகுரோ கொடுத்த பந்தை அவர் சரியாக உதையாத நிலையில் அதை பிரேஸிலின் கோல் காப்பாளர் அலிஸன் பெக்கர் பிடிருந்தார். இதைத் தொடர்ந்து ஆர்ஜென்டீனாவின் முன்களவீரரான றொட்றிகோ டி போலின் கோல் கம்பத்தை நோக்கிய உதையானது கோல் கம்பத்துக்கு மேலால் 20 அடி தூரத்துக்கு மேல் சென்றிருந்தது.

இதேவேளை, சக முன்களவீரரான பிலிப் கோச்சினியோவிடம் கப்ரியல் ஜெஸூஸ் கொடுத்த பந்தை அவர் கோல் கம்பத்துக்கு மேலால் செலுத்திருந்தார்.

இதையடுத்து ஆர்ஜென்டீனாவின் பின்கவீரர்கள் இருவரைத் தாண்டிச் சென்று அடையாளப்படுத்தப்படாமலிருந்த றொபேர்ட்டோ ஃபெர்மினோவிடம் கப்ரியல் ஜெஸூஸ் கொடுத்த பந்தை போட்டியின் 71ஆவது நிமிடத்தில் கோலாக்கியதோடு இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரேஸில் வென்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .