Shanmugan Murugavel / 2015 நவம்பர் 13 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷ், சிம்பாப்வே அணிகளுக்கிடையில் மிர்பூர் ஷேர் பங்களா தேசிய அரங்கில் இன்று ஆரம்பமான இரண்டு போட்டிகள் கொண்ட இருபது-20 சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணித் தலைவர் மஷ்ரபி மோட்டார்சா, சிம்பாப்வே அணியைத் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார். இன்றைய போட்டியில், பங்களாதேஷ் அணி சார்பாக 20 வயதான புறச் சுழற்பந்து வீச்சாளர் ஜுபைர் ஹொசைன், இருபது-20 சர்வதேசப் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்டார்.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 19.3 ஓவர்களில் சகல விக்க்கெட்டுக்களையும் இழந்து 131 ஓட்டங்களை பெற்றது. ஒரு கட்டத்தில் அவ்வணி, 10 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்தபோதும், சிம்பாப்வே அணி சார்பாக இருபது-20 சர்வதேசப் போட்டிகளில் வேகமாக பெற்ற அரைச்சதமாக இருந்த 21 பந்துகளில் அணித்தலைவர் எல்டன் சிக்கும்புராவின் சாதனையை முறியடித்து, 20 பந்துகளில் அரைச்சதத்தை பூர்த்தி செய்த மல்கொம் வோலரின் அதிரடி காரணமாகவே அவ்வணி, இந்த ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றிருந்தது.
துடுப்பாட்டத்தில் சிம்பாப்வே அணி சார்பாக மல்கொம் வோலர் 31 பந்துகளில் ஆறு, 6 ஓட்டங்கள், நான்கு, 4 ஓட்டங்கள் உள்ளடங்கலாக 68 ஓட்டத்தைப் பெற்றார்.
பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக முஷ்டாபிஸூர் ரஹ்மான், அல்-அமின் ஹொசைன், மஷ்ரபி மோட்டார்சா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர். அறிமுகப் பந்துவீச்சாளர் ஜுபைர் ஹொசைன், முதலாவது ஓவரில் 20 ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருந்தாலும், இரண்டாவது ஓவரில் அவரும் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். தவிர, நசிர் ஹொசைன், மஹ்முதுல்லா ஆகியோரும் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு 132 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 17.4 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. ஒரு கட்டத்தில், அவ்வணி 80 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை இழந்திருந்த போதும், மஹ்முதுல்லா, லிட்டன் தாஸ், மோட்டார்சா அவ்வணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர்.
துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பாக தமீம் இக்பால் 31, மஹ்முதுல்லா ஆட்டமிழக்காமல் 22, சபீர் ரஹ்மான் 18, லிட்டன் தாஸ் 17, நசிர் ஹொசைன் 16, மோட்டார்சா ஆட்டமிழக்காமல் 15 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் சிம்பாப்வே அணி சார்பாக சிறப்பாக செயற்பட்ட கிரேமி கிறீமர் 3 விக்கெட்டுக்களையும் டெண்டாய் சிஸோரோ 2 விக்க்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
போட்டியின் நாயகனாக சிம்பாப்வே அணியின் மல்கொம் வோலர் தெரிவானார்.
40 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
51 minute ago
1 hours ago